Published : 15 Jun 2022 07:42 PM
Last Updated : 15 Jun 2022 07:42 PM

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் மலேசியா வாசுதேவனின் இதமான குரலில் திகட்டாத 10 பாடல்கள்

தொலைதூர பயணத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில் திரை தீப்பிடிக்காத காலகட்டத்தின் நாயகர்களின் அறிமுகப் பாடல் மூலம் ரசிகர்களுக்கு தீயைக் கடத்தியது அந்தக் குரல்.

இப்படி இருவேறு தொனிகளில் ஜாலங்களை நிகழ்த்தி, பலரது மனங்களை மயக்கிய அந்த மாயக்குரல் மலேசியா வாசுதேவனுடையது.

பாரதிராஜாவின் முதல் படம், இளையராஜா இசை, ஜோடியாக பி.சுசிலாவின் குரல், இப்படி ஒரு கம்பேக் எத்தனைப் பாடகருக்கு கிடைத்திருக்கும். உண்மையில் ‘16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை பாட வேண்டியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆனால், அவரது குரல் அன்று சரியில்லாத காரணத்தால், மலேசியாவுக்கு அந்தப் பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த பாடல்தான் "செவ்வந்தி பூ முடித்து சின்னக்கா" வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மலேசியா வாசுதேவன். அதன்பின்னர், பாடிய அனைத்து பாடல்களுமே, நினைவில் இருந்த நீங்காதவை.

குறிப்பாக, இசையமைப்பாளர் இளையராஜா காம்பினேஷனில் மலேசியா பாடிய பாடல்கள் எல்லாம் எவர்கிரீன் மெலடிகளாகட்டும், உச்சஸ்தாயில் நடிகர் ரஜினிகாந்துக்கான அறிமுகப் பாடலாக இருந்தாலும் சரி, சோக கீதங்களாகட்டும் மலேசியாவுக்கு நிகர் அவர்தான்.

எத்தனையோ பாடல்களை அவர் பாடிவிட்டு இந்த மண்ணை விட்டுச் சென்ற அவரது பாடல்களில், நாம் கேட்கும்போதெல்லாம் நம்மை உயிர்ப்பிக்கும் சில பாடல்கள்: (10 பாடல்களின் இணைப்பு கீழே)

  • ஆகாய கங்கை (தர்மயுத்தம்)
  • ஒரு தங்க ரதத்தில் (தர்மயுத்தம்)
  • வா வா வசந்தமே (புதுக்கவிதை)
  • பூவே இளைய பூவே (கோழிக்கூவுது)
  • இந்த மின்மினிக்கு (சிகப்பு ரோஜாக்கள்)
  • வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்)
  • மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)
  • தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னுப் போச்சு)
  • கோடைகால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
  • பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
  • அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே (காளி)
  • கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு (குங்குமச்சிமிழ்)
  • வெட்டிவேரு வாசம் (முதல் மரியாதை)
  • நிலா காயுது நேரம் நல்ல நேரம் (சகலகலா வல்லவன்)
  • குயிலே குயிலே பூங்குயிலே (ஆண்பாவம்)
  • ஒரு கூட்டு கிளியாக (படிக்காதவன்)
  • பொதுவாக என் மனசு தங்கம் (முரட்டுக்காளை)
  • ஏத்தமய்யா ஏத்தம் (நினைவே ஒரு சங்கீதம்)
  • தானந்தன கும்மிகொட்டி (அதிசயப்பிறவி)
  • பொட்டு வச்ச தங்ககுடம் (பொன்மனச் செல்வன்)
  • ஜாதியில்ல பேதமில்ல தண்ணி போட்டுட்டா (காதல் பரிசு)
  • குயிலு குப்பம் குயிலு குப்பம் (புது நெல்லு புது நாத்து)
  • மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்)
  • இளம்வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் (பாண்டி நாட்டுத் தங்கம்)
  • ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி (தர்மத்தின் தலைவன்)
  • ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு)
  • என்னம்மா கண்ணு சவுக்கியமா (மிஸ்டர் பாரத்)

"வா வா வசந்தமே" - புதுக்கவிதை படத்தில் இந்தப் பாடல் இடம்பெறும். காதல் தோல்வியின் ஆறாத ரணங்களைச் சுமந்துவரும் நாயகன், பாடுவது போல இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். அதிலும், அந்தக் காதல் ரணங்களை மறைத்துமூடுவேன், சிரித்து வாழ்த்துவேன் என்று பாடி முடிக்கும்போது, நாயகன் ரஜினிக்கு வருவதைப் போலவே, நம் கண்கள் முன்பாகவும் படத்தின் நாயகி ஜோதி வந்து செல்வார்.

"பூவே இளைய பூவே" - கோழிக்கூவுது படத்தில் வரும் இந்தப் பாடல், இப்படம் வெளியான காலகட்டம் வரை, இப்போது பலரும் விரும்பிக்கேட்டகும் பாடல். இப்போது கேட்டாலும் அவ்வளவு இளமையாக இருக்கும். குறிப்பாக, மலேசியா வாசுதேவன் எனக்கு தானே என்று உச்சஸ்தாயில் செல்லும்பேது நம் காதுகள் ஜில்லிடும் உணர்வை பெறும்.

"இந்த மின்மினிக்கு" - சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் வரும் இப்பாடலை,மலேசியா வாசுதேவனுடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார் . "காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை சொர்க்கம் என் கையிலே" எனும்போது நாயகி மட்டுமல்ல நாமும்கூட ஒருமுறை வெட்கத்தில் சிவந்துவிடுவோம்.

"வான் மேகங்களே வாழ்த்துங்கள்" - புதிய வார்ப்புகள் படத்தில் வரும் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனுடன் ஜானகி பாடியிருப்பார். "தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா" என்ற வரிக்கு ஒப்பாக தென்றல், தோகை கொண்டு நம்மை தீண்டியிருப்பார் வாசு.

"மலர்களே நாதஸ்வரங்கள்" கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் இந்த டூயட் பாடலையும் ஜானகியுடன் சேர்ந்து மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். "மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே" என்ற வரிகளெல்லாம் பாடும்போது, நமக்குள்ளும் வர்ணஜாலங்களை நிகழ்த்தியிருப்பார்.

"தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி" தூறல் நின்னுப் போச்சு படத்தில் வரும் இப்பாடலை ஜானகியுடன் சேர்ந்து பாடியிருப்பார். முதல் சரணத்தில், "காவல் நூறு மீறி, காதல் செய்யும் தேவி, உன் சேலையில் பூ வேலைகள், உன் மேனியில் பூஞ்சோலைகள்" என்ற வரிகளை மலேசியா எடுக்கும் விதம் அத்தனை ஆத்ம திருப்தியாக இருக்கும்.

"கோடைகால காற்றே" பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனின் எவர்கிரீன் ஸோலோ. குறிப்பாக, காதல் சோகத்தில் நாயகன் பாடும் மான்டேஜ் காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் "இவைகள் இளமாலை பூக்களே, புதுச்சோலை பூக்களே" என்ற வரிகள் மலேசியா குரலோடு சேரும் கோரஸும் நம்மை தலைகோதி தாலாட்டும்.

"பூங்காற்று திரும்புமா" - முதல் மரியாதை படத்தில் வரும் இந்த பாடல். கம்பீரம், கனத்த சோகம், மெல்லி காதல் இம்மூன்றையும் தனது நடிப்பில் சிவாஜி வெளிப்படுத்தியிருபபார். அதை பாடல் மூலம் தனது குரலில் வெளிப்படுத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன்.

"ஆசை நூறு வகை" - அடுத்த வாரிசு படத்தில் நடிகர் ரஜினியின் அறிமுக பாடல் இதுதான். இப்போது கேட்டாலும் கூட, உங்கள் கால்கள் தன்னால் ஆட்டம் போடும். பாடலை தனது வசியக் குரல் கொண்டு இழைத்திருப்பார் மலேசியா வாசுதேவன்.

"மலையோரம் மயிலே " - ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் வரும் இந்தப்பாடலை மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து சித்ரா பாடியிருப்பார். பாடலில் மலேசியாவின் குரலில் வரும் "தந்தன தத்தன தந்ததந்த தானனான" ஒவ்வொரு முறை கேட்கும்போதும், இந்த குரலுக்கு வரிகள் எதற்கு என்று எண்ணத் தோன்றும் வகையில் அத்தனை லயமாக வசியம் செய்திருப்பார் மலேசியா வாசுதேவன்.

காதல், வீரம், சோகம் உள்பட தமிழ் மொழியில் இருக்கும் பல்வேறு உணர்வுகளுக்கும் உயிர்கொடுத்து தனது இதமான குரலால், காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவனின் பிறந்த நாளான இன்று... அவர் விட்டுச் சென்ற பாடல்கள் என்றும் நம்மிடம் இருந்து பிரிக்கமுடியாதவையே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x