

சிறு வயதில் பெற்றோரையும், தங்கையையும் கார் விபத்தில் இழந்தவன் தர்மா (ரக்ஷித் ஷெட்டி). வளர்ந்து பெரியவன் ஆன பிறகு, ஏனோதானோ என வாழ்கிறான். அவனிடம் வந்து அடைக்கலமாகிறது ‘சார்லி’ என்கிற பெண் நாய்க்குட்டி. தொடக்கத்தில் விருப்பமின்றி அதற்கு இடம்தருகிறான்.
பின்னர், அது காட்டும் அன்பு அவனது இழப்பின் வலிக்கு மருந்தாக மாற, அதனுடன் ஒன்றிப்போகிறான். சார்லி வளர்ந்து பெரிதாகும்போது, அடுத்த இடிதர்மாவை தாக்குகிறது. சார்லிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவர, அதன் நாட்கள் எண்ணப்படுகின்றன. தன் வாழ்க்கையை மாற்றிய சார்லியின் கடைசி ஆசையை புரிந்துகொள்ளும் அவன், அதை நிறைவேற்ற, அதனுடன் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம்தான் கதை.
நாய்களை ஒரு கதாபாத்திரமாகக் கொண்டுசமீபத்திய ஆண்டுகளில் வெளியான படங்களில், இது போலித்தனமற்ற ‘காவியத் தன்மை’யுடன் இருக்கிறது. வாழ்க்கை மீது எந்த பிடிமானமும் இல்லாமல் வாழும் ஒரு மனிதனை, ஒரு நாயின் அன்பு மாற்றிவிடும் என்பதை காட்டும் தொடக்க காட்சிகள் ஆர்ப்பாட்டமின்றி இயல்பாக நகர்கின்றன.
தர்மா - சார்லி இடையிலான உணர்வூக்கம் மிகுந்த காட்சிகள், மிகை நாடகமாக இல்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இப்படத்தை தனித்துக் காட்டுகிறது.
தர்மாவாக நடிக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும், சார்லியாக வரும் நாய்க்கும் இடையிலான ‘ஒத்திசைவு’, எந்த காட்சியிலும் சொதப்பல் என்றோ, சுமார் என்றோ சொல்லிவிடமுடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் அதற்குரிய மெனக்கெடலுடன் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் கிரண்ராஜ்.கே.
சுட்டித்தனங்களை காட்டும்போதும் சரி, தர்மா மீது அன்பை பொழியும்போதும் சரி, அந்தநாய் நடித்திருக்கிறது என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு, படத்தில் நடித்துள்ள லாப்ரடர் ரெட்ரீவர் வகை நாய்க்கு வெகு நேர்த்தியாக பயிற்சி அளித்திருக்கிறார் புரமோத்.பி.சி.
படத்தின் இரண்டாம் பாதியில், பெரும்நிலவெளிகளுக்கு காட்சிகள் நகர்ந்துவிடுகின்றன. அந்த சூழலில், அரவிந்த் கே கஷ்யப்பின்ஒளிப்பதிவும், நுபின் பாலின் இசையும் இணைந்து, ஒரு சிறந்த பயணத் திரைப்படத்தின் அனுபவத்தை தருகின்றன. குறிப்பாக, பயணப் பாடல்கள் தரும் உணர்வு, சார்லியை ஒரு நாய் என்பதற்கும் அப்பால் எடுத்துச் செல்கிறது.
நாய்களை ‘ப்ரீட்’ செய்யும் முறையில், சில பணத்தாசை பிடித்த மனிதர்கள் செய்யும்தவறுகளை சுட்டிக்காட்டும் படம், அப்படியொரு மனிதரை காட்டும்போது, சினிமாவில்லன்போல காட்டியதை தவிர்த்திருக்கலாம்.
அதேபோல, துணை கதாபாத்திரங்கள் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, படத்தின்நீளத்தையும் கணிசமாக குறைத்திருக்கலாம்.
தனது நாயின் நலனுக்காக, புகைப்பதை கைவிடும் கதாநாயகனையும், தனக்கு உள்ளன்போடு பாசம் காட்டிய எஜமானனின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் ஒரு நாயையும் உணர்வுப்பூர்வ பிணைப்புடன் சித்தரிக்கும் இந்த ‘சார்லி’யை நம் கண்களால் வருடிக் கொடுக்கலாம்!