

சூர்யா நடித்த '24' படத்தின் முன்கதை படமாகும் என்று இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்திருக்கிறார்.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 6ம் தேதி வெளியான படம் '24'. சூர்யா தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் "இப்படத்தின் முன்கதையை உருவாக்கும் எண்ணம் இருக்கிறது. அது ஆத்ரேயா - சேதுராமன் ஆகிய இரட்டைச் சகோதரர்களின் முன்கதை என்ன என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்வது போல இருக்கும்" என்று இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இறுதியில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ள விக்ரம் குமார், "அல்லு அர்ஜூனுடன் ஒரு படம் மற்றும் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களையும் முடித்து விட்டுத் தான் '24' படத்தின் முன்கதை குறித்து யோசிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.