

இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "அன்பு லோகேஷ், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறைமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிடவும் அதிகம்.
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதை நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூப்பை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும்" என்பது போன்று பேசியுள்ளார்.
இந்தக் கடிதத்தை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள லோகேஷ், ''லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்" என்று குறிப்பிட்டு, "இந்தக் கடிதத்தை படிக்கும்போது நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது!. நன்றி ஆண்டவரே.." என்று பதிவிட்டுள்ளார்.