'கைதி'யை மீண்டும் பார்த்துவிட்டு 'விக்ரம்' உலகுக்கு வாருங்கள் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

'கைதி'யை மீண்டும் பார்த்துவிட்டு 'விக்ரம்' உலகுக்கு வாருங்கள் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Published on

''இந்த திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது.இதை நான் ஏனென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்'' என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவுள்ள படம், 'விக்ரம்'. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் படம் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதில் இருந்தே ''உலகநாயகன்'' ரசிகனாகவே இருந்திருக்கிறேன், இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னும் இது ஒரு கனவு போலிருக்கிறது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு துணை நின்ற நல்லுள்ளங்கள், அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளை துவங்கி 18 மாதங்கள் ஆகிறது.

ரத்தமும் வியர்வையும் சிந்தி, (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, ''உலகநாயகன்'' கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம். வாய்ப்புக்கு நன்றி சார். இந்த திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் ஏனென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்.

என் அன்பான ரசிகர்களுக்கு இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்களுக்கு சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து மறக்க முடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். கைதியை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in