கலைஞர்களுக்கான ரயில் கட்டண சலுகை தொடர பூச்சி முருகன் கோரிக்கை

கலைஞர்களுக்கான ரயில் கட்டண சலுகை தொடர பூச்சி முருகன் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை : கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகையை மீண்டும் தொடர ஆவன செய்ய வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் அவர்கள் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் இன்று(28.5.2022) காலை கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்தார். அதில், நமது நாட்டுப்புற இசை, நடன, நாடகக் கலைஞர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் பாரம்பரிய கலைகளை போற்றிக் காத்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்துக்கு பின்னர் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையிலும் கலையைக் காப்பாற்றி வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறை 51 பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு கட்டண சலுகையினை வழங்கி வந்தது. இந்த சலுகைகளினால் ஆசிரியர்கள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல தரப்பினர் பலன் அடைந்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் தொடங்கியபோது மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட அவசியமான 11 பிரிவினருக்கு மட்டும் கட்டண சலுகை அனுமதிக்கப்பட்டது.

இதர பிரிவினருக்கான பயண சலுகைகள் நிறுத்தப்பட்டன. கலைஞர்கள் என்ற பிரிவில் இதுவரை ரயில் கட்டண சலுகையை பெற்று வந்த கிராமிய இசை, நடன, நாடகக் கலைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக சொற்ப தொகையையே வருமானமாக பெறும் அவர்கள் அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகளில் கூட நிகழ்ச்சி நடத்த செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வறுமையில் சிரமப்படும் அவர்களுக்கு நிறுத்தப்பட்ட இந்த ரயில் கட்டண சலுகை மீண்டும் தொடர ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களிடம் ஆவன செய்யுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன'' இவ்வாறு அந்த கோரிக்கை கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in