

சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கம், கடந்த 1961-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இதே வளாகத்தில் கடந்த 2006-ல் சாய் சாந்தி என்ற மற்றொரு திரையரங்கம் கட்டப்பட்டது. இந்த திரையரங்குகளை இடித்துவிட்டு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பொழுதுபோக்கு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் சிவாஜி குடும்பத்தினர் அறிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சியாக சாந்தி தியேட்டரில் சூர்யா நடித்த ‘24’ திரையிடப்பட்டது. சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்ட கடைசி காட்சி என்பதால், சிவாஜி ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந் தனர். இதைத் தொடர்ந்து 2 தியேட்டர் களும் திங்கட்கிழமை முதல் மூடப் பட்டன. திரையரங்க கட்டிடம் 3 மாதங்களில் இடிக்கப்பட்டு, சர்வ தேச அளவிலான தொழில்நுட்ப வசதிகளோடு புதிய பொழுது போக்கு வணிக வளாகம் உருவாக விருக்கிறது.
சாந்தி திரையரங்கில் திரையிடப் பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘தூய உள்ளம்’. சென்னையின் முதல் ‘ஏசி' திரையரங்கம் என்ற பெருமைகொண்ட இதில், சிவாஜி கணேசன் நடித்த ‘பாவ மன்னிப்பு’, ‘திருவிளையாடல்’, ‘வசந்த மாளிகை’, ‘தங்கப்பதக்கம்’, ‘முதல் மரியாதை’ ஆகிய படங்கள் 25 வாரங்கள் ஓடின. பிரபு நடித்த ‘சின்னத்தம்பி’ படம், 205 நாட்கள் ஓடியது. ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ 888 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த திரையரங்குகளில் சாந்தி அரங்கமும் ஒன்று. இதை எம்ஜிஆரே கூறியிருக்கிறார். சென்னையின் பொழுதுபோக்கு அடையாளங்களாக திகழ்ந்த சஃபையர், மேகலா, ஃபைலட், சன் தியேட்டர் போன்ற திரையரங்குகளின் வரிசையில் தற்போது சாந்தி திரையங்கமும் மூடப்பட்டுவிட்டது.
‘சாந்தி, சாய் சாந்தி திரையரங்குகள் புதுப்பிக்கப்பட இருப்பதால் மே 16-ம் தேதி முதல் மூடப்படுகிறது. இதுநாள் வரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி’ என்று சாந்தி திரையரங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.