

பிகில் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து முழு திரைப்படம் உருவாக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளார் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
இதில் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தாலும் ராயப்பன் கதாப்பாத்திரம் வெகுவாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதனிடையே, சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தின் வலைத்தளப் பக்கத்தில், விஜய்யின் ராயப்பன் கேரக்டர் புகைப்படத்தை பகிர்ந்து, ராயப்பன் கதையை மட்டும் வைத்து ஒரு முழு படம் உருவானால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் என்று ரசிகர்களிடம் சொல்லியது.
இதற்கு பதிலளித்த இயக்குனர் அட்லி, “செஞ்சிட்டா போச்சு” என்று பதிவிட அந்த ஒற்றவரி பதிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘தளபதி 68’ படத்துக்காக விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையலாம் என்று கூறப்படும் நிலையில் இந்தப் பதிவு வரவேற்பை பெற்றுவருகிறது.