

விக்ரம் படத்தில் 'பத்தல பத்தல' பாடலில் ஒன்றியம் வார்த்தை இடம்பெற்றுள்ளது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் 'பத்தல பத்தல' சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில், இந்த பாடலை கமலே எழுதியும், பாடியும் இருக்கிறார். இந்த பாட்டின் வரிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங். ஒருபுறம் பாடலுக்கு வரவேற்பு இருந்தாலும், மறுபுறமும் பாடல் குறித்து விமர்சனுமும் எழுந்தன.
குறிப்பாக, பாடலில் அரசியல் நெடி வெகுவாக உள்ளது. சில காலமாக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் தமிழக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. இந்த பாடலில் கமல், 'ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே' எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றிரவு சென்னையில் விக்ரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் கலந்துகொண்ட கமலிடம் இந்த ஒன்றியம் வரிகள் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். ஒன்றியம் என்ற வார்த்தைக்கு பதில் பல வார்த்தைகள் உள்ளது. பத்திரிகையாளர் இணைந்துள்ள இந்தக் கூட்டம்கூட ஒன்றியம் தான். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வைத்துள்ள சங்கம்கூட ஒரு ஒன்றியம் தான். படம் வெளிவந்த பிறகு, இதற்கான அர்த்தங்கள் தெரியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3ல் ‘விக்ரம்’ படம் வெளியிடப்படுவது திட்டமிட்டு நடந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த கமல், 'அது தற்செயலாக நடந்தது. என்றாலும் எதேச்சையாக நடந்ததில் சந்தோசம் தான்' என்று விளக்கம் அளித்துள்ளார்.