மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார் டி.ராஜேந்தர்?
நடிகர் டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். லட்சிய திமுக என்ற கட்சியையும் நடத்திவந்தார். ஒருகட்டத்தில் கட்சியைக் கலைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலையில் தொடர்ந்து சில சிக்கல் நிலவுவதால், மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட இருப்பதாகத் தெரிகிறது.
