

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' திரைப்படத்தின் இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'கபாலி' டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறது.
'கபாலி' டீஸர் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது இப்படம் ஜூலை 1-ம் தேதி வெளியிடுவதை உறுதி செய்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.
வரும் 9-ஆம் தேதி ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்திற்கான பாடல்கள் உரிமையை பிரபல இசை நிறுவனமான ‘திங்க் மியூசிக்’ (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது.
‘திங்க் மியூசிக்’ நிறுவனம் 'கபாலி' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பாடல்கள் உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.