

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார் நடிகர் விஜய். இந்த சந்திப்பின்போது இயக்குநர் வம்சியும் உடன் இருந்தார்.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அழைப்பது வழக்கம். தற்போது இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரது 66-வது படம் என்பதால் தளபதி 66 என அறியப்படுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார் நடிகர் விஜய். இந்தச் சந்திப்பின்போது இயக்குநர் வம்சியும் உடன் இருந்துள்ளார். முதல்வரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான பிரகதி பவனில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.