

பவன் குமார் இயக்கத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் தீவிரம் காட்டி வருகிறார் சமந்தா.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் தனது படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு "சில காலத்திற்கு எந்த ஒரு புதிய படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் ஒய்வு எடுக்க இருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா தெரிவித்தார்.
கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'யூ-டர்ன்' படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் வெளிவரும் முன்பே, தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதியாகி இருந்தது.
பவன்குமார், தற்போது 'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகளும் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியையும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருக்கிறார் பவன் குமார்.
'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்க இருப்பது யார், யாரெல்லாம் சமந்தாவுடன் நடிக்கவிருக்கிறார்கள் உள்ளிட்டவற்றை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.
நகரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் பல்வேறு கொலைகளில் தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சவாலை ஒரு பெண் பத்திரிகையாளர் எப்படி கையாள்கிறார் என்பதே 'யூ-டர்ன்' படத்தின் கதைக்களம்.