

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ரெமோ'. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மேலும் 2 படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு படத்தை 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமாரும், மற்றொரு படத்தையும் இயக்குநர் பொன்ராமும் இயக்க இருக்கிறார்கள்.
பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தில் 'ரஜினி முருகன்' குழுவை அப்படியே மீண்டும் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.