

'பீஸ்ட்' படத்தின் இறுதிக் காட்சி குறித்து முன்னாள் விமானப்படை பைலட் ஒருவர், 'இதில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மூலம் 'பீஸ்ட்' படத்தின் இறுதிக்காட்சி டிரெண்டாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ் லீ, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், மே 11-ம் தேதி 'சன் நெக்ஸ்ட்' 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து பலரும் இந்தப் படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 'பீஸ்ட்' படம் திடீரென சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து ட்விட்டரில் டிரெண்டாகியது. இதற்கு, ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய விமானப்படை பைலட் சிவராமன் சஜன் பதிவிட்ட ட்வீட்டே காரணம்.
'பீஸ்ட்' படத்தின் இறுதிக்காட்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட்டுள்ள அவர், 'எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன' என்னு பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள மற்றொரு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி "என்ன இது? என் மூளை உணர்விழந்துவிட்டது. என்னால் முன்னோக்கி சிந்திக்கவே முடியவில்லை. எல்லா லாஜிக்கும் வடிந்துவிட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.
அதேசமயம் ''லாஜிக் இல்லாமல், வெறும் அட்ரினலை அதிகரிக்கும் ஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 'பீஸ்ட்' மட்டும் முதல் படமல்ல' என்றும் சிலர் ஆதரவு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
1,500 கிலோமீட்டர் வேகத்தில் ஜெட் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் விஜய் எதிரே வரும் பெண் விமானிக்கு சல்யூட் அடிக்கும் காட்சியையும் குறிப்பிட்டு, 'மைக்ரோ செகண்ட்களில் கடந்துவிடும் வேகத்தில் அவர் எப்படி சல்யூட் அடிப்பார்?' எனவும், போர் விமானங்களை இயக்கும்போது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க ஆக்ஸிஜன் மாஸ்க், ஜெட்டின் ஒலியை எதிர்கொள்ள ஹெல்மேட் அணிவது கட்டாயம் ஆனால் விஜய்க்கு அதெல்லாம் தேவையில்லை போல என பலரும் 'பீஸ்ட்' படத்தின் இறுதிக் காட்சியை பகடி செய்து வருகின்றனர்.