

தமிழ் படத்திற்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சியில் திருட்டு டிவிடி எடுக்கிறான். நாம் என்ன பண்ணப் போகிறோம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா காட்டமாக தெரிவித்தார்.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 6-ம் தேதி வெளியான படம் '24'. சூர்யா தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஒரு படத்தின் திருட்டு டிவிடியை வைத்து, அதை எங்கிருந்து காட்சிப்படுத்தினார்கள் என்பதை க்யூப்பில் இருக்கும் தொழில்நுட்பம் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் '24' படத்தின் திருட்டு டிவிடி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய க்யூப்பில் பதிவு செய்தார்கள். பெங்களூரில் உள்ள பிரபலமான திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தது படக்குழு.
அத்திரையரங்கிற்கு படத்திற்கு சென்றால் அனைத்து உடமைகளையும் சரிசெய்து தான் உள்ளே அனுப்புவார்கள். அப்படி அனுப்பப்படும் திரையரங்கில் இருந்து '24' காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால் கடும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
இது குறித்து ஞானவேல்ராஜாவிடம் பேசிய போது "இப்போதைக்கு தமிழ்நாடு உரிமை என்னிடம் இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டில் இருக்கும் முன்னணி திரையரங்குகள் அனைத்திலும் '24' படத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்றிருக்கிறேன். இதற்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படமும் இந்த திரையரங்கிற்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்களா என்பதை நான் சொல்ல முடியாது.
'24' வெளியான முதல் நாள் காலை 9:45 முதல் காட்சியில் எடுத்திருக்கிறார்கள். 260 பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கில் 168 பேர் படம் பார்த்திருக்கிறார்கள். அதில் இருந்து திருட்டி டிவிடி எடுத்திருக்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களுக்கு தெரியாமல் எடுத்திருக்க முடியாது. ஏனென்றால் படத்தின் ஒலிக்கான கேபிள் எல்லாம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக திருட்டு டிவிடி எடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த திரையரங்கின் ஆப்ரேட்டருக்கு தெரியாமல் எடுத்திருக்க முடியாது. இது முதல் முறையும் கிடையாது.
பெங்களூரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் கன்னடப் படத்தின் டிவிடி வர வேண்டுமே. ஏன் வரவில்லை? அந்தப் படத்தை எடுக்காமல் தமிழ்ப் படத்தை எடுக்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தான் என் கேள்வி. இவர்கள் செய்யும் காரியத்தால் பின்புலத்தில் என்னவாகிறது என்பது தெரியவில்லை.
'ப்ரேமம்' மலையாளப் படத்திற்கு 100 நாள் கழித்து திருட்டு டிவிடி வந்தது. அதற்கே மொத்த திரையுலகமும் இணைந்து அவ்வளவு போராட்டம் பண்ணி அவர்களது ஒற்றுமையைக் காட்டினார்கள். இங்கு முதல் நாள் முதல் காட்சியில் திருட்டு டிவிடி எடுக்கிறான். நாம் என்ன பண்ணப் போகிறோம்?" என்று காட்டமாக தெரிவித்தார்.