

ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமாக 'தனி ஒருவன் 2' அமையும் என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கில் ராம் சரண் நடிப்பது உறுதியாகி விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை அன்று ரசிகர் ஒருவர் "'தனி ஒருவன்' 2ம் பாகம் எப்போது எதிர்பார்க்கலாம்" என்று ட்விட்டர் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு "கண்டிப்பாக.. ரவியின் 25வது படமாக இருக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது 'போகன்' என்று பெயரிடப்பட்டுள்ள நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சுசீந்திரன், கெளதம் மேனன், ஏ.எல்.விஜய் ஆகியோரது படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.