Published : 09 May 2022 10:00 AM
Last Updated : 09 May 2022 10:00 AM
மனைவியை இழந்தவரான சுப்பிரமணி (கே.எஸ்.ரவிக்குமார்) கோவைஅருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். அவரது மகன் ஆதி (தர்ஷன்). அவனுக்கு ஒரு ஜெர்மனி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. தான் பணிபுரியும் நிறுவனத்தின் தயாரிப்பான ரோபோ ஒன்றை கொண்டுவந்து அப்பாவுக்கு பணிவிடைகள் செய்ய அவரிடம் விட்டுவிட்டு ஜெர்மனிக்கு பறந்துவிடுகிறான்.
சுயசார்பு மிக்க சுப்பிரமணி, அந்த குட்டி ரோபோவை நிராகரித்து அதனுடன் பழக மறுக்கிறார். பிறகு, ரோபோவின் அக்கறையான செயல்களால் மெல்ல ஈர்க்கப்படும் அவர், ரோபோவுடன் ஐக்கியமாகிவிடுகிறார். இதற்கிடையில், அந்த ரோபோவை அப்பாவிடம் இருந்து பிரித்துமீண்டும் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் மகனுக்கு ஏற்படுகிறது. ரோபோவை பிரிய சுப்பிரமணி சம்மதித்தாரா, இல்லையா என்பது கதை.
கடந்த 2019-ல் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற மலையாளப் படத்தின் மறுஆக்கம்தான் இப்படம். தமிழுக்காக சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து படமாக்கியுள்ளனர் அறிமுக இயக்குநர்களான சபரி - சரவணன்.
சக மனிதர்களுடன் அவ்வளவு எளிதாகபழக விரும்பாத, ஆனால், அன்பானவர்களின் அருகாமையை விரும்பும் முதன்மை கதாபாத்திரமான சுப்பிரமணி, ஓர் இயந்திர மனிதனை தன் வாழ்க்கைக்குள் அனுமதிக்கும் விதம், உணர்வுகுன்றாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது. தன்எஜமானரது மனைவியின் அஸ்தி கலசத்துக்கு மரியாதை செய்வது, அவரதுபள்ளிப் பருவக் காதலை உயிர்ப்பிக்கமுகநூல் மூலம் உதவுவது எனத்தொடங்கி, ‘நான் ஒரு இயந்திர மனிதன்,எனக்கு உணர்வுகள் என்று எதுவும் கிடையாது’ என உண்மையை உரைப்பதுவரை, இயந்திர மனிதன் கதாபாத்திரத்துக்கான எல்லையை திரைக்கதையில் வரையறை செய்த விதம் சிறப்பு.
கடந்த ஆண்டு ‘மதில்’ படத்தில் லட்சுமிகாந்தனாக வந்து கவனிக்க வைத்த கே.எஸ்,ரவிக்குமார், இதில் சுப்பிரமணி என்ற முதியவராக மாறி, நவரச நடிப்பால், ஒற்றை ஆளாக படத்தை தாங்குகிறார். அவரது மகன் ஆதியாக நடித்துள்ள தர்ஷன், அவரது காதலியாக வரும் லாஸ்லியா இருவரும் அழகான தோற்றத்தில் வந்து அளவாக நடிக்கின்றனர். சின்னச் சின்னதாய் சிரிக்க வைக்கும் யோகிபாபு, தனக்கும் குணச்சித்திர நடிப்பு வரும் என காட்டியிருக்கிறார்.
உணர்வுகளின் கலவையாக விரியும் படத்துக்கு ஜிப்ரானின் இசையும், மண் மணத்துடன் இணையும் அறிவியல் புனைவுக்கு இணக்கமான அர்வியின் ஒளிப்பதிவும் பலம் கூட்டுகின்றன.
பிள்ளைகளால் தனித்துவிடப்படும் பெற்றோரின் பாதுகாப்பற்ற தனிமையை, அறிவியல் புனைவின் துணைகொண்டு ‘ஜனரஞ்சக’மாக சொன்னதில், இந்த‘கூகுள் குட்டப்பா’ அனைத்து வயதினருக்கும் பிடித்துப்போகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT