

கடந்த இரண்டு வாரங்களில் நான்கு படங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளன. 'ஹாஸ்டல்', 'பயணிகள் கவனிக்கவும்', 'கூகுள் குட்டப்பா' மற்றும் 'விசித்திரன்' ஆகிய படங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரிசையாக படையெடுத்துள்ளன. அண்மையில் வந்த இந்த 4 படங்களும் அவற்றின் அசல் தன்மையை பிரதிபலித்துள்ளதா? அவற்றில் நிலவும் சிக்கல்கள் என்னென்ன? - இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக ரீமேக் செய்யப்படும் படங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட படத்தின் உணர்வை பிசகாமல் மண்ணுக்கேற்ப கடத்தினாலே போதுமானது. அதுவே, அந்தப் படத்தை ரீமேக் செய்ததற்கான நியாயத்தை சேர்த்துவிடும். ரீமேக் செய்யப்படும் படத்தின் உணர்வை ஒரு பார்வையாளன் பெறுவதற்கு இயக்குநர்கள் எந்த திரைக்கதை ட்ரீட்மென்டை வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால், அப்படியான உணர்வுகளை கடத்துவதில் இயக்குநர்கள் தடுமாறுவதைக் காணக் முடிகிறது.
உதாரணமாக சமீபத்தில் வெளியான 'ஆண்டாய்டு குஞ்சப்பன்' படத்தின் ரீமேக்கான 'கூகுள் குட்டப்பா' படத்தை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, குறைவான வசனங்களுடன், கதாபாத்திரங்களின் எக்ஸ்பிரஷன்கள் மூலமாக கடத்தப்படும் உணர்வுகளுக்கு கனம் அதிகம். அதை மலையாள சினிமா உலகம் சிறப்பாகவே கையாண்டு வருகிறது. 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தில், சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரம் இறுக்கமான, பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். காரணம், ஒரு மெஷினான ரோபோவின் வருகை அந்த இறுக்கத்தை எப்படி தளர்த்துகிறது என்ற உணர்வை பார்வையாளனுக்கு கடத்தவும், அந்த மாற்றத்தின் வேறுபாடுகளை காட்டவும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும்.
தவிர, மகன் தனது பேச்சை மீறி வெளிநாடுக்கு செல்வதை, முக பாவனைகளாலும், மௌனத்தாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருப்பார் சுராஜ். சொல்லப்போனால் அந்த படத்துக்கான ஜீவனே சுராஜ் கதாபாத்திரம்தான். அதைச் சுற்றி நிகழும் கதைக்கான உயிரை அந்தக் கதாபாத்திரம் கொடுப்பதால் அதை எழுப்பட்டிருக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
ஆனால், 'கூகுள் குட்டப்பா'வை எடுத்துக்கொண்டால், சுராஜ் கதாபாத்திரத்தை ஏற்று தமிழில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார் என்ற போதிலும், உணர்வுகளை கடத்த தவறியிருக்கிறார். தமிழில் இருக்கும் சிக்கல், தந்தை - மகனுக்கு இடையில் மௌனத்தை ஈட்டு நிரப்ப வேண்டிய இடங்களை வசனங்கள் கவ்விக்கொண்டு அகல மறுக்கின்றன. ஆயிரம் வார்த்தைகளைக்காட்டிலும், ஒரு சில நிமிட மௌனத்திற்கு வலிமை அதிகம். காட்சி மொழிக்கு அது மிகவும் முக்கியம். அப்படிப்பார்க்கும்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருக்கும் அந்த தனிமையையும், மகன் மீதான அதிருப்தியையும் பார்வையாளனுக்கு கடத்த முடியவில்லை. 'உன் விருப்பப்படி பண்ணு..' என தொடங்கி பேசும் வசனத்துக்கும், முகத்தைக்கூட திருப்பாமல், 'ம்ம்..' என முடிக்கும் சொல்லுக்கு இடையிலான வித்தியாசம்தான். ஆண்ட்ராய்டு குஞ்சப்பனுக்கும் கூகுள் குட்டப்பாவுக்குமான இடைவெளி.
'விக்ருதி' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான, 'பயணிகள் கவனிக்கவும்' படத்தில் கதையைக் கடந்து நிற்பது 'விதார்த்' தின் நடிப்பு. அவர் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பை அப்படியே வாரி இறைத்துக்கொள்ளவில்லை. மாறாக, தனக்கான தனி பாணியை படத்தில் பின்பற்றியிருப்பார். மலையாளத்தில் சுராஜ் கதாபாத்திரம் செய்யாத புது யுக்தியை கையாண்டு அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் எழுப்பும் ஒலியை எழுப்பி நடிப்பில் தனக்கான தனி முத்திரையை பதித்து, அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருப்பார் விதார்த்.
அதுதான் தேவையும் கூட. மொழிமாற்றம் மட்டும் செய்து, படத்தை அப்படியே அச்சுவார்ப்பதற்கு பதிலாக, கதாபாத்திரம் கடத்தும் உணர்வை மெருகேற்றுவது தான் ரீமேக்குக்கான உரிய நியாயத்தை சேர்க்கும். அந்த வகையில் விதார்த் கதாபாத்திரம் பாராட்டு பெற்றாலும், சோபின் சாஹிர் கதாபாத்திரத்தை தமிழ் ஏற்று நடித்திருக்கும் கருணாகரன் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்ற வைத்தது. விதார்த் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்ததால் 'பயணிகள் கவனிக்கவும்' 'விக்ருதி' ரீமேக்கை ஏமாற்றவில்லை.
ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'ஜோசப்' படம், 'விசித்திரன்' ஆக ரீமேக்காகியிருக்கிறது. மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே இதற்கும் இயக்குநர் என்பதால் மூலக்கதையை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு எடுத்துவந்திருக்கிறார். இந்தப் படத்தில் யதார்த்தத்திற்காக வலிந்து திணிக்கப்பட்ட நடிப்பை நடிகர்கள் ஏற்றுக்கொள்வதால், செயற்கைத்தனத்தை படம் நெடுங்கிலும் காணமுடிகிறது. ஜோஜூ ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் தேவையான உணர்ச்சிகளை கடத்துவதில் சிரமப்படுகிறார். கதாபாத்திரத் தேர்வில் மெனக்கெட்டிருக்கலாம்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் காமெடி படமான 'ஆதி கப்யரே கூடமணி' திரைப்படம் மலையாளத்தில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதை தமிழில் 'ஹாஸ்டல்' ஆக ரீமேக் செய்யும்போது, திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையில் கூடுதல் கவனத்தையும் செலுத்தியிருக்கலாம். 'அடல்ட்' காமெடி என்ற பெயரில் முகச்சுளிப்புகளை படம் பரிசாக தந்தது. நாசர், முனீஷ்காந்த் இருவர் மட்டுமே படத்தை ஓரளவு நகர்த்த உதவியிருந்தனர்.
ரவி மரியா கதாபாத்திரத்தின் செயல்பாடுகள், ஓவர் ஆக்டிங் ரசிக்க வைக்கவில்லை. அலுத்துப்போன அதரப் பழசான காமெடிகளை கைவிட்டு, டிரெண்டையொட்டிய நகைச்சுவைகளால் மட்டும் தான் இனி ஹாரர் பாணி படங்களுக்கு கைகொடுக்க முடியும். மற்றபடி, 2015-ல் மலையாளத்தில் வெளியான படத்தை அப்படியே 2022-ம் ஆண்டு எந்த மாற்றமும் இன்றி வெளியிட்டால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நான் கண்கூடாக பார்க்கிறோம். படத்தை ரீமேக் செய்வதில் காலக்கட்டமும் முக்கிய பங்காற்றுகிறது. நவீனங்களை செரித்து மாற்றங்கள் அரங்கேறும் இச்சூழலில் ரசிகர்களின் ரசனைகளும் மாறிக்கொண்டேயிருக்கிறது. இயக்குநர்கள் அதற்கேற்றார்போல தங்களின் எழுத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
சமீபத்திய படங்கள் மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளை எடுத்துகொண்டாலும், அதில் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் அதன் அசல் படத்தின் உணர்வை கொடுக்க தவறியிருப்பதை பார்க்க முடியும். அதிலிருந்து தப்பி பிழைத்தது 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' தான். மலையாளத்திலிருந்த அதே ஒரிஜினாலிட்டி உணர்வை 'பாபநாசம்' படம் கடத்தியிருக்கும். கதாபாத்திர தேர்வு தொடங்கி விறுவிறுப்பும் அப்படியே இருக்கும். மோகன்லாலுக்கு டஃப் கொடுத்து நடித்திருப்பார் கமல். அவர் மட்டுமல்ல மீனா, கௌதமி என இரண்டு படங்களிலும் வந்த கதாபாத்திரங்களும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள்.
அதேபோல, மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களில் அஞ்சலி மேனன் இயக்கிய 'பெங்களூர் டேஸ்' படத்தை 'பெங்களூரு நாட்கள்' என சிதைத்திருப்பார்கள். அசலுடன் ஒட்டாத செயற்கைத்தனத்தை படம் முழுக்க பயணிப்பதை காண முடியும். அதேபோல, மலையாள சினிமா உலகின் போற்றி கொண்டாடப்பட்ட, 'சார்லி' படத்தை 'மாறா' என்ற பெயரில் பழிவாங்கியிருப்பார்கள். ஃபீல் குட் மூவியான 'சார்லி' படத்தின் மையக்கருவையும் பெரும்பாலான காட்சிகளையும் எடுத்துக்கொண்டு, தமிழில் தனது கதையை சேர்த்து 'மாறா' படத்தை உருவாக்கி பர்னிச்சரை உடைத்திருப்பார் இயக்குநர் திலீபன்.
இது தவிர, 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்கான 'நிமிர்', 'ஷட்டர்' படத்தின் ரீமேக்கான 'ஒரு நாள் இரவில்' மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற 'ஹெலன்' படத்தை 'அன்பிற்கினியாள்' என வந்த தடயமே தெரியாமல் சொதப்பிய படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இனியாவது மலையாளத்தில் சிறந்த படங்களை தமிழுக்கு திரைவார்க்கும் இயக்குநர்கள் கூடுதல் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது, மலையாள திரையுலகிற்கு செய்யும் நன்றிக்கடன்!