

'வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நம் உறுப்பினர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்' என்று விஜய் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், இந்த தேர்தலிலும் விஜய்யின் பேர் அவ்வப்போது செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் வரும் போது இம்முறை விஜய்யின் ஆதரவு யாருக்கு என்ற ஒரு கேள்வி எழும். ஆனால், விஜய்யோ அமைதியாக அவருடைய படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்.
இந்தத் தேர்தலில் விஜய்யின் பெயர் மிக அதிகமாக செய்திகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. விஜய்யிடம் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் பேசிவிட்டார். ஆகையால் அனைவருமே விஜய் ரசிகர்கள் அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விஜய் அவருடைய நற்பணி இயக்கத்தினரை கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இச்செய்தியினை முன்வைத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு ஆதரவு என்று செய்திகளை பரப்பி வருகிறார்கள். சில விஜய் ரசிகர்கள் 'தலைவா' பிரச்சினையை முன் வைத்து விஜய் எடுத்த முடிவு இது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் நற்பணி இயக்கத்தினரிடம் என்ன தெரிவித்தார் என்று அகில இந்திய விஜய் நற்பணி இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளிடம் பேசிய போது, "தலைவர் எங்களிடம் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்க சொல்லவில்லை. தேர்தலில் எனது பெயர், புகைப்படம், நற்பணி இயக்கத்தின் கொடி ஆகியவற்றை உபயோகப்படுத்தாமல் உங்களுடைய விருப்பப்படி யாருக்கு வேண்டுமோ வாக்களியுங்கள்.
ஆனால் பெயரோ, புகைப்படமோ, கொடியோ தவறாக உபயோகிக்கும் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆகையால் ரசிகர்கள் அவர்களது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் எந்த ஒரு செய்தியிலும் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.
விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகளின் பேச்சைப் பார்த்தால், அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மவுனமே பதிலாக அளித்திருக்கிறார் விஜய்.
தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் அப்படத்தின் முதல் பாடலுக்காக தினேஷின் நடன அசைவில் ஆடிக் கொண்டிருக்கிறார் விஜய்.