

நான் 7,500 பாடல் எழுதிவிட்டேன். ஆனாலும், இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு காப்புரிமையை பெற்றுத்தரும் IPRS எனும் (indian performing rights society) அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது தான் கவிஞர் வைரமுத்து இதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சில், "மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதன், சுரங்கள் மொத்தம் 7 என்பதால் அதன் பிறகு இருக்கும் எண், என்ன என்று கூட தனக்கு தெரியாது என்பார். IPRS அமைப்பு வருவதற்கு முன் ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது. கலைஞர்கள் கற்பனைவாதிகள். பாவம் அவர்கள் சட்டம் அறியாதோர், உரிமை தெரியாதோர். தாய்ப்பாலுக்கும், நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
மேற்கத்திய நாடுகளில் 100 பாட்டு எழுதினால், அந்த கவிஞர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை. மேலும், அதற்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு பசிபிக் கடல் ஓரத்தில் அவர்களால் சொந்த தீவு வாங்கி விட முடியும்.
நான் 7,500 பாடல் எழுதிவிட்டேன். ஆனாலும், இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் ஒருவர் 25 ஆண்டுகள் இருக்க முடியும், அதிலும் 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும்" என்று பேசியுள்ளார். இந்த பேச்சு வைரலாகி வருகிறது.