திரை விமர்சனம்: கதிர்

திரை விமர்சனம்: கதிர்
Updated on
1 min read

பொறியியல் பட்டதாரியான கதிர்(வெங்கடேஷ்), வேலை தேடிகிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, நண்பன் குடியிருக்கும் வீட்டில் அடைக்கலமாகிறான். வீட்டின் உரிமையாளரான பாட்டிக்கும் (ரஜினி சாண்டி), அவனுக்கும் முட்டல் மோதலில் தொடங்கும் அறிமுகம், பின்னர்ஆத்மார்த்தமான நட்பாக மாறுகிறது. கைநழுவிப் போய்விடும் வேலை, நண்பனின் இழப்பு ஆகியவை கதிரை முடக்கிப்போடுகின்றன. அப்போது தனதுவாழ்க்கை கதையை கதிருக்கு சொல்கிறார் ‘ஹவுஸ் ஓனர்’ பாட்டி. அது அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப்போட்டதுஎன்பது கதை.

‘நாம வாழறது முக்கியமில்ல. யாருக்காக வாழறோம், எப்படி வாழறோம் என்பதுதான் முக்கியம்’ என்கிற ஒரு வரியை, இருவேறு தலைமுறை மனிதர்களின் உணர்வுகள் வழியாக, ஆர்ப்பாட்டமின்றி, அதேநேரம் அழுத்தமான சம்பவங்களுடன் சித்தரிக்கிறது திரைக்கதை.

நாயகன் கதாபாத்திரத்தை எதார்த்தம் தொட்டு எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிவேல். கதிரின் கதாபாத்திரம், கிராமியப் பின்னணியில் இருந்து நகரம் நோக்கி வரும் பல இளம் பட்டதாரிகளின் பிரதி பிம்பம் எனலாம். ரஜினி சாண்டியின் கதாபாத்திரத்தை அழுகையோ, புலம்பலோ இல்லாமல் சித்தரித்ததும் பாராட்டுக்குரியது.

கதிராக நடித்துள்ள வெங்கடேஷ் மிக இயல்பாக, அழகாக தனது கதாபாத்திரத்தை கடந்து வருகிறார். ‘பிரேமம்’மலையாளப் படத்தில் அறிமுகமான ரஜினி சாண்டிக்கு தமிழில் அழுத்தமான அறிமுகம். நாயகியாக வரும் பாவ்யா த்ரிகா, கல்லூரி காட்சிகளில் சுட்டித் தனத்தின் மொத்த உருவமாக படு இயல்பு.ஃபிளாஷ்பேக் காட்சியில் வசீகரிக்கிறார் ‘சார்பட்டா பரம்பரை’ சந்தோஷ் பிரதாப்.

கதிரின் கல்லூரி வாழ்க்கை - சென்னை வாழ்க்கையை ஒளியமைப்பு வண்ணங்களின் வழியே அழகாகவேறுபடுத்திக் காட்டுகிறது ஜெயந்த்சேது மாதவனின் ஒளிப்பதிவு. மலையாளஇசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளையின் பாடல்களும், பின்னணி இசையும்படம் கிளர்த்தும் உணர்வுத் தோரணங்களுக்கு ஊக்கம் தருகின்றன.

கிராமத்தின் ஆன்மா விவசாயத்தைநம்பியிருப்பதையும், விவசாயத் தொழிலாளர்கள் 3 சதாப்தங்களுக்கு முன்புநடத்தப்பட்ட விதத்தை வலுவாகவும், வலியுடனும் சொல்லி, அந்த காலகட்ட உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். இன்றைய இளைஞர்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் வாய்ப்புகளை எப்படிகண்டடைவது என்பதை எடுத்துக்காட்டிய விதத்திலும் தனித்து கவனிக்க வைக்கிறான் ‘கதிர்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in