

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
சமீபத்தில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விநியோகஸ்தர்கள் தரப்பில் "கம்மியான விலைக்கு வாங்கி கோடிகளை கொடுத்தது 'பிச்சைக்காரன்' தான்" என்கிறார்கள்.
'பிச்சைக்காரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தை தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். இறுதியாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் சசி.
இப்படத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக இப்படத்தின் நாயகர்களாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.