திரை விமர்சனம்: பீஸ்ட்

திரை விமர்சனம்: பீஸ்ட்
Updated on
2 min read

தீவிரவாத இயக்கத் தலைவரை அதிரடியாக கைது செய்கிறார் ‘ரா’ உளவுப் பிரிவு ஏஜென்ட் வீரா (விஜய்). அந்த ஆபரேஷனில் எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி உயிரிழந்துவிட, அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளாகி சென்னைக்கு வருகிறார். அங்கு அர்ச்சனாவை (பூஜா ஹெக்டே) சந்தித்து, அவர் பணிபுரியும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு உதவுவதற்காக, அவர்களுடன் ஒரு ஷாப்பிங் மால் செல்கிறார். அப்போது, அந்த மாலினை ஒருதீவிரவாதிகள் குழு ‘ஹைஜாக்’ செய்து, பொதுமக்கள் பலரை பிணைக் கைதிகளாக பிடிக்கின்றனர். வீராவால் கைது செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத் தலைவரை விடுவிக்குமாறு ‘டீல்’ பேசுகின்றனர். வீரா தனி ஆளாகதீவிரவாதிகள் குழுவை எப்படி வேட்டையாடினார்? மக்களை பத்திரமாக மீட்டாரா? ‘ஹைஜாக்’கில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு என்ன பங்கு? வீரா அதை எப்படி கையாண்டார் என்பது கதை.

விஜய்க்கான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குநர்நெல்சன். நகைச்சுவை, சென்டிமென்ட், காதல், அரசியல் என அனைத்தையும் கச்சிதமாக கதைக்குள் ‘பேக்’ செய்திருக்கிறார். ஆனால் விஜய்க்கான ஹீரோயிசத்தில் போதிய நம்பகத்தன்மையை உருவாக்குவதில் பின்தங்கிவிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விஜய்யின் தொடக்க ஆபரேஷன், மாலில் தனிமனித ராணுவமாக மாறுவது, பிறகு இந்திய விமானப் படை விமானத்துடன் பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்துவிட்டு திரும்புவது என ‘ஆக்‌ஷன் பிளாக்குகள்’ கவரும் விதமாக இருந்தாலும், அதற்கான லாஜிக்கில் போதிய கவனம் செலுத்தவில்லை.

ஷாப்பிங் மாலை ஆக்கிரமித்த தீவிரவாதிகள் நல்ல ஜீவன்களாக இருக்கின்றனர். அங்கு மாட்டிக்கொண்ட மக்களை யோகா வகுப்புக்கு வந்தவர்களைப்போல ஒழுங்கான வரிசையில் அமரவைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். நாயகன் கூறுவதையெல்லாம் வேதவாக்குபோல நம்புகின்றனர். விஜய்யின் மிகைநாயக சாகசப் படங்களில், அவருக்கு இணையாக வில்லன் தரப்பு வலுவாக சித்தரிக்கப்படும் உத்தியை ஏனோ இயக்குநர் இதில் எத்திவிட்டுவிட்டார்.

ஆனாலும், நாயகனுக்கு குழந்தைகள் மீதுஇருக்கும் நிபந்தனையற்ற அன்பு, குற்ற உணர்வால் தூண்டப்படும் அக்கறை ஆகியவற்றை வைத்து திரைக்கதையில் அழுத்தம் ஏற்படுத்தியிருப்பதும், அமைச்சரின் மனைவி, மகளைவைத்து நடக்கும் அரசியல் விளையாட்டை நாயகன் அணுகும் விதமும் முதல் பாதி படத்தை தொய்வடையாமல் காப்பாற்றுகின்றன.

செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் விடிவி கணேஷ், பூஜாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வரும் சதீஷ் ஆகிய துணைகதாபாத்திரங்களும், அவற்றுக்கு இடையிலான உரையாடலும் சிரிப்பு வெடிகளாக சிதறுகின்றன. யோகி பாபு - ரெடின் கிங்ஸ்லிஜோடி, கிடைத்த இடத்தில் சிரிக்க வைக் கின்றனர்.

‘ஹலமிதி’, ‘ஜாலிலோ ஜிம்கானா’ ஆகிய2 பாடல்களிலும் நடனத்தால் தனது ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து படைக்கிறார் விஜய். நாயகனை காதலிப்பது, அவருக்கு உதவுவது, பிறகு ஊடல் கொள்வது ஆகியவற்றுடன் பாடல்களில் இணைந்து நடனமாடுவதை தவிர பூஜா ஹெக்டேவுக்கு வேறு பெரிய வேலை இல்லை. உளவுத் துறை அதிகாரியாக வரும் செல்வராகவன், நடிகராக முதல் படம் என்று கூறமுடியாத அளவுக்கு தேர்ச்சியான நடிப்பை தருகிறார். மத்திய அமைச்சராக வரும் ஷாஜியின் கதாபாத்திரம் உள்குத்துடன் வலைய வருவதாலோ என்னவோ, நடிப்பில் ‘மேடை நாடகத்’தனம் மேலோங்கித் தெரிகிறது.

அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் படத்துக்கு தேவையானதை தருகின்றன. வண்ணங்கள், ஒளிவெள்ளத்தை சற்று அதிகமாகவே காட்சிகளில் கொட்டுகிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. சோர்வு ஏற்படுத்தாத வகையில் காட்சிகளை சரியான வரிசையில் அடுக்கித் தந்து கவனம் ஈர்க்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.நிர்மல். மால் செட்டிங்கில் கலை இயக்குநர்களின் உழைப்பு தெரிகிறது. பல சண்டைக் காட்சிகள் தர்க்கத்துக்கு வெளியே நின்றாலும் அன்பறிவ் இரட்டையர் சுவாரஸ்யமாக வடிவமைத்துள்ளனர்.

சூழ்நிலை நகைச்சுவை, வெகுஜன ரசிகர்களை ஈர்க்கும் விதமான ஆக்‌ஷன் காட்சிகள், தொய்வு இல்லாத திரைக்கதை என ஒட்டுமொத்த படத்தையும் அலுப்பின்றி கடக்க முடிந்தாலும், தீவிரவாதிகள் தரப்பையும், அமைச்சரின் சிறுபிள்ளைத்தனமான ஆட்டத் தையும் வலுவாக அமைக்கத் தவறியதில் விஜய் ரசிகர்களுக்கான படமாக மட்டும் சுருங்கிவிட்டது ‘பீஸ்ட்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in