

'டாணாக்காரன்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அப்படத்தின் நடிகர் விக்ரம் பிரபுவை ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த படம் 'டாணாக்காரன்'. அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதன ராவ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் உருவான இப்படம் ஏப்.8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காவலர் பயிற்சி மையத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்ட இந்தப் படம் தமிழ் சினிமாவின் புது முயற்சி என பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை பாராட்டியது அற்புதமான உணர்வை அளித்தது. நான் கனவில் கூட இதை நினைத்துப் பார்க்கவில்லை. உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றி முன்னேறி செல்லும்போது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகள் நடக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.