Last Updated : 12 Apr, 2022 05:33 PM

Published : 12 Apr 2022 05:33 PM
Last Updated : 12 Apr 2022 05:33 PM

'நானுமே அந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்; இனி போலீஸ் படமே வேணாம்னு யோசிக்கிறேன்' - ’டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் நேர்காணல்

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'டாணாக்காரன்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தனது திரைப் பயணம் குறித்து இயக்குநர் தமிழ் அளித்த சிறப்பு நேர்காணல்...

'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் இது புது முயற்சி என்று பலரும் பாராட்டுகிறார்கள். கடும் உழைப்பைச் செலுத்தி இந்த படத்தை எடுத்தோம் என்று குறிப்பிட்டிருந்தீங்க. இந்த வெற்றிய எப்படி பார்க்குறீங்க?

"இந்த தருணத்தை உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, பலரிடம் கதை சொன்னபோது, பல கேள்விகள் இருந்தன. படம் புரியுமா? உங்கள் சொந்த அனுபவம் என்கிறீர்களே... என நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், நான் உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் நம்பினேன். அவர்கள் இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக இருந்தேன். நான் நினைத்தது இன்று மிகச் சரியாக நடந்திருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி."

காவல் அதிகாரி 'தமிழ்'... இயக்குநர் 'தமிழ்'... உங்களோட இந்தப் பயணத்தை பற்றி சொல்லுங்க?

"சொல்லபோனால், நான் காவல்துறையில் இணைவதற்கு முன்னதாகவே இயக்குநராக வேண்டும் என்ற முயற்சி எடுத்தேன். எனக்கு அப்பொழுதிருந்தே அந்தக் கனவு இருந்தது. எப்படியாகவோ சினிமாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தேன். என் திருமணத்திற்கு பெண்பார்க்கச் செல்லும்போதே, என் மனைவியிடம், ''நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல பிரச்சினை இல்ல. நான் போலீசா இருக்க மாட்டேன். சினிமாவுக்குள்ள போயிடுவேன்'' என்று அவர்களை பார்த்த முதல் முறையே கூறிவிட்டேன். அவ்வளவு தூரத்திற்கு ஒரு பெரிய திட்டமிடலுடன் இருந்தேன். சினிமாவுக்குள் நுழைந்துவிட என தீர்க்கமாக நம்பியிருந்தேன். காவல்துறையில் 12 வருடங்கள் பணியாற்றினேன். பிறகு, சினிமாவுக்குள் நுழைந்துவிட்டேன்."

'டாணாக்காரன்' படத்தை எத்தனை நாட்களுக்குள் எழுதி முடித்தீர்கள்? படத்தை எழுதி முடிப்பதற்கும் ஷூட்டிங்குக்கும் எவ்வளவு நாள் இடைவெளி இருந்தது?

"’விசாரணை’ படத்தில் வெற்றிமாறன் அவர்களுடன் இணைந்து படம் பண்ணிக்கொண்டிருந்தேன். 'சினிமாவில் எப்போதும் களம் தான் முக்கியம். சினிமாவில் நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டால் போதும் அதுவே 50 சதவீதம் வெற்றி தான்' என்று வெற்றிமாறன் அடிக்கடி சொல்லுவார். அப்படிப் பார்க்கும்போது, நாம் எந்த களத்தை தேர்வு செய்யலாம் என யோசித்தேன். அப்போது என் கண்முன்னால் வந்து நின்ற களம் இந்த காவலர் பயிற்சி களம் தான். ஏனென்றால் நான் நிறைய அனுபவித்து அதில் வாழ்ந்திருக்கிறேன். அது தொடர்பான நிறைய தகவல்களும் என்னிடம் இருந்தது. அதை நண்பர்களிடம் சொல்லும்போது அவர்களும் ஊக்கப்படுத்தினர். அப்போது தான், 'நாம் ஏன் இந்த களத்தை வைத்து ஒரு படம் பண்ணக்கூடாது?' என எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு ஐடியா உருவாக்கி, ரூட் எடுத்து அண்ணன் வெற்றிமாறனிடம் கூறினேன். 'ரொம்ப பிரமாதமான களமா இருக்கு. தாராளமா பண்ணலாம்' என கூறினார். அதன்பிறகு எழுத ஆரம்பித்தேன். சரியாக 2015-ம் ஆண்டு இந்த கதையை எழுத தொடங்கி, 2019-ல் படப்பிடிப்பை தொடங்கினோம். கிட்டத்தட்ட இதை எழுத 4 வருடங்கள் தேவைப்பட்டது."

வெற்றிமாறன் படம் பார்த்தாரா? பாத்துட்டு என்ன சொன்னாரு?

"சார் படம் பார்த்துவிட்டு மனதார பாராட்டினார். ''உன்கிட்ட இருந்து இவ்ளோ பெரிய அவுட்புட் நான் எதிர்பார்க்கல. இது பெரிய கதை, முதல் படம் வேற. எப்படி எடுக்கப்போறான். முதல் கதையா இவ்ளோ பெரிய கதை தேர்வு பண்ணிருக்கான். தயாரிப்பாளர்கள் சப்போர்ட் பண்ணனும், நடிகர்கள் ஒத்துழைக்கணும், எப்படி பண்ணுவான்னு எனக்குள்ள பயம் இருந்துச்சு. ஆனா அதையெல்லாம் தாண்டி சொன்னத விட பெருசா எடுத்துட்டு வந்துட்ட. படம் தமிழ் சினிமாவுல பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். தமிழ் திரையுலகில் இது ஒரு முக்கியமான படமா இருக்கும்'' என அவர் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது."

லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ்வெங்கட், மதுசூதன் ராவ் உள்ளிட்ட கதாபாத்திர தேர்வு குறித்து சொல்லுங்க..

"சில கதாபாத்திரங்கள் நாம் தேடிச்செல்வோம். சில கதாபாத்திரங்கள் அதுவாக அமையும். அப்படி எம்.எஸ்.பாஸ்கர், முருகன், பாவல், பிரகதீஸ்வரன் ஆகியோர் என் தேர்வு. 'லால்' கதாபாத்திரத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தேர்வு செய்தார். அவர் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்துவார், கேட்டுபார்ப்போம் என்றார். அப்போது லால், சுல்தான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போ அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர் எக்ஸ்டார்டினரி ஆர்ட்டிஸ்ட். அப்படித்தான் அவர் படத்திற்குள் வந்தார். சில தேர்வுகள் தயாரிப்பு நிறுவனத்தின் தேர்வுகள். மற்ற கதாபாத்திர தேர்வுகள் அனைத்தும் என்னுடைய தேர்வுகள்."

படத்தில் காட்டியது போல நீங்களும் காவலர் பயிற்சி பள்ளியில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டீர்களா?

"கண்டிப்பா. என் பேட்ஜில் மட்டும் நடந்ததை மட்டும் வைத்து நான் இந்தப் படத்தை இயக்கவில்லை. இதற்கு முன்னதாக இருந்த பல்வேறு பேட்ஜ் நண்பர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அனைத்தையும் தொகுத்தே இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன்."

இயக்குநர் 'தமிழ்' ஏன் டாணாக்காரன் படத்தை எடுக்க வேண்டியிருக்கு..? அதுக்கான தேவை பொதுசமூகத்துல எவ்வளவு முக்கியத்துவமா இருக்கு?

"நான் ஓர் உதவி இயக்குநராக, படைப்பாளியாக ஒரு கதை எழுதும்போது, இந்த சமூகத்திற்கு தீர்வு சொல்கிறோம். கேள்வி கேட்கிறோம் என்று எண்ணி இந்தக் கதையை எழுதவில்லை. நான் என் சினிமாவுக்கான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்கிறேன். அது குறித்து எழுதுகிறேன். எழுதி முடித்து பார்க்கும்போதுதான் இதில் இவ்வளவு கேள்விகள் இருக்கிறது என்பதை நானே உணர்ந்தேன். நாம் படத்தில் இவ்வளவு சொல்லியிருக்கிறோமா? என அப்போது தான் தெரிந்தது. இந்த சமூகத்தில் நாம் ஒரு பெரிய கேள்வியை கேட்டுவிட்டோம், அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை. நான் ஒரு சினிமாவை முன்வைத்திருக்கிறேன். நான் வாழ்ந்த வாழ்க்கையை படமாக்கியிருக்கிறேன். அதிலிருந்து கேள்விகள் எழும்போது, அது நியாயமாக இருப்பதை உணர்கிறேன்."

குறிப்பாக படத்தில் ஒரு மரத்திற்கு காவலர் ஒருவர் காவல் காக்கும் காட்சி பலராலும் பேசப்பட்டது. ஒட்டுமொத்த படத்தின் கதையும் ஒரே காட்சியில் விளக்கியிருந்தீர்கள்.. அந்த காட்சியை எப்படி எழுதினீர்கள்?

"அந்தக் காட்சி அப்படியே மணிமுத்தாரில் நடந்தது. மணிமுத்தாரில் பயிற்சி எடுத்த யாரிடம் கேட்டாலும் அதைச் சொல்வார்கள். உண்மையிலேயே நடந்ததைத் தான் காட்சியாக வைத்தோம். காவல்துறையில் இதுபோன்ற நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். இந்த சம்பவத்தில் நானும் கூட இருந்திருக்கிறேன்."

நீங்க காட்டியது எல்லாமே 1998. இப்போது 2022. காவலர் பயிற்சி அமைப்புகள் எந்தெந்த வகையில் மாறியிருக்கிறது, எதெல்லாம் இன்னும் மாறவில்லை? எதெல்லாம் மாறணும்ன்றது உங்க பார்வை?

"எனக்கு அதுபற்றி சரியாக தெரியவில்லை. நான் அதிலிருந்து வெளியே வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு பின்னால் தற்போது சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் இருந்தபோதும், அதற்கு முன்பும் மிகவும் சிரமமாகவே இருந்தது. பல மாற்றங்கள் இன்னும் வந்தால் நன்றாக இருக்கும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் காவலர் பயிற்சிப் பள்ளியில் சென்று பேசினால், இன்னும் ஆரோக்கியமாக இருக்குமோ, அப்படி கொடுக்கலாமா? என நான் சிந்திப்பேன். அப்படியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோணும்."

போலீஸ் தரப்புல இருந்து உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த மாதிரியான ஃபீட்பேக் வந்துச்சு?

"எனக்கு பெரிய பாராட்டே அவர்கள் தரப்பிலிருந்துதான் கிடைத்து. வாட்ஸ்அப் குழு என பல இடத்தில் படத்தைப் பாராட்டி என்னைக் கொண்டாடிவிட்டார்கள். இன்றும் கூட பலரும் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். என்னுடன் பணியாற்றிவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 'எங்கள எல்லாத்தையும் 20 வருஷம் பின்னால கொண்டு போயிட்ட' என நிறைய நபர்கள் தொடர்பு கொண்டு சிலாகித்தார்கள்."

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது... தியேட்டரில் படம் ரிலீஸாகியிருக்கலாம்னு தோணுதா? தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்றீங்களா?

"அப்படி நான் நினைக்கவில்லை. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால், இந்த வாரம் பீஸ்ட், கே.ஜி.எஃப்2 போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. அவர்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் ஒன்றுமேயில்லை. ஓடிடி எனக்கு பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு நூலகத்தில் இருக்கும் புத்தகத்தைப்போல ஓடிடியில் என் படத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் வீடுகளுக்குள்ளும் இருக்கும் ஒரு அங்கமாக இந்த படம் இருக்கிறது. அவர்கள் தேவைப்படும்போது படத்தைப் போட்டு பார்த்துக்கொள்வார்கள். இதுபோன்ற சின்ன படங்களுக்கு, புது இயக்குநர்களுக்கு ஓடிடி ஒரு சாதகமான விஷயமாக நான் பார்க்கிறேன். இது முழுக்க என் கருத்து."

திரைமொழியை எப்படி கற்றுக்கொண்டீர்கள்? அதற்காக என்னென்ன விஷயங்கள் செய்தீர்கள்?

"அதற்கு முழுக்க, முழுக்க வெற்றி மாறன் என்னும் ஆளுமைதான் காரணம். படப்பிடிப்பு முடிந்த பிறகு, எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளின்போது, உதவி இயக்குநர்களிடம் அவர் நீண்டதொரு உரையாடலை நிகழ்த்துவார். திரைப்படம் எப்படி இருக்கவேண்டும், களங்கள் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என நிறைய சொல்வார். நிறைய படங்களை பார்க்கச் சொல்வார். புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்வார். வெற்றிமாறனிடம் பணியாற்றியதால் திரைமொழி கைகூடியதாக நினைக்கிறேன்."

ஸ்கார்ட்லாந்து யார்டு இணையான காவல்துறைன்னு நம்ம போலீஸ புகழ்றோம்.. ஆனா உள்ள இவ்ளோ சிக்கல் இருக்கு. நம்மகிட்ட ஒரு போலீஸ் ஹார்ஷா ரியாக்ட் பண்ண அவங்களோட இந்த டிரெயினிங் தான் காரணமா?

"தமிழகத்தை எடுத்துக்கொண்டால் அவ்வளவு எளிதில் ஒரு இடத்திற்குள் நுழைந்து உங்களால் குற்றம்புரிந்து விட முடியாது. எளிதில் கண்டறிந்து காவல்துறைக்கு மக்கள் தெரிவித்துவிடுவார்கள். மக்கள் பண்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து காவல்துறை மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். அது மிகப்பெரிய உழைப்பு. இங்கே மனிதநேயமிக்க காவல்துறை தேவை என்று தான் நான் சொல்கிறேன். உடல் ரீதியான பயிற்சி நிச்சயம் தேவை. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மன ரீதியான விஷயங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். மரியாதையாக, பண்புடன் காவலர்கள் நடத்தபட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். மற்றபடி உடற்தகுதி வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன்."

டுத்த படம் எப்போ எதிர்பாக்கலாம். இதேமாதிரி காவல்துறை கதையை மையமா வைத்து அந்த படம் இருக்குமா? இல்ல வேறு எதும் புதிய கதைக்களமாக இருக்குமா?

"அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளேன். நடிப்பது, இயக்குவது எல்லாமே காவல்துறையாக இருப்பதால் இனிமேல் காவல்துறை கதையே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். விரைவில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும்."

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x