Published : 11 Apr 2022 01:57 PM
Last Updated : 11 Apr 2022 01:57 PM

கோலிவுட் அப்டேட்ஸ்: ஜெயம் ரவியுடன் நடிக்கும் நயன்தாரா | மன்றங்களை பிரித்த சூர்யா, கார்த்தி

அகமது இயக்கத்தில் ‘ஜன கண மன’ படத்தில் நடித்து வந்தார் ஜெயம் ரவி. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த அந்த படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை அகமது இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்துக்கு பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்துநடிக்கும் படம் இது. இதில் நடிக்க நயன்தாராவுக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவர் 20 நாட்கள் மட்டுமே இந்தபடத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

குவைத், கத்தாரில் தடை

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாக இருக்கிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தைசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உட்படபலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தில் பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இருப்பதாலும், வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாலும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கத்தாரிலும் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்றங்களை பிரித்த சூர்யா, கார்த்தி

நடிகர்கள் சூர்யா,கார்த்தி ஆகியோரின் ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்தன. இந்த நிலையில், சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக ஆரம்பித்து நடத்துவது போல, இருவரும் தற்போது ரசிகர் மன்றங்களையும் பிரித்துள்ளனர். சொந்த நிறுவனங்களிலேயே இருவரும் அதிக படங்களில் நடித்து வருவதால், தங்களது பிசினஸை அதிகப்படுத்தவும் இதன் மூலம் அவர்கள் திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது

தமிழில் ‘டிரான்ஸ்’

பகத் பாசில், நஸ்ரியா, கவுதம்மேனன், திலீஷ் போத்தன்நடித்த மலையாள திரைப்படம் ‘டிரான்ஸ்’. அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துவதுடன், அப்பாவிகளின் நம்பிக்கையை சாதகமாக்கிஅவர்களது உயிருடன் விளையாடுகிறது ஒரு கும்பல். இதற்கு துணைபோகும் இளைஞன், உண்மை தெரியும்போது என்ன முடிவெடுக்கிறான் என்பது கதை.மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இப்படம் ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.

சசிகுமார் ஜோடியாக ரம்யா நம்பீசன்

கடந்த 2016-ல் வெளியான ‘அஞ்சல’ நகைச்சுவை படத்தை இயக்கியவர் தங்கம் பா.சரவணன். தற்போது இவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்சசிகுமார். இது, தென்இந்தியாவை இணைக்கும் டிராவல் பற்றிய கதை. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் 60 சதவீத கதை அங்குதான் படமாக்கப்பட உள்ளது.இப்படத்தை எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார். இப்படத்தில் 2 கதாநாயகிகள். ஒருவர், தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா. மற்றொரு நாயகியாக நடிக்க ரம்யா நம்பீசனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இப்படத்தில் கருணாஸ், விக்னேஷ், ‘அகண்டா’ நிதின் மேத்தா, பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x