

20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிப்பில் வட சென்னையின் உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகிவரும் 'போலாமா ஊர்கோலம்' என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் கஜசிம்ஹா மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபுஜித் தயாரித்துள்ள திரைப்படம் 'போலாமா ஊர்கோலம்'. கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப்பங்களிப்பு முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் பிரபுஜித் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் பயின்ற சக்தி மகேந்திரா நாயகியாக அறிமுகமாகிறார்.
1980-களில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிய 20 கால்பந்தாட்ட வீரர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பாக பேசிய இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் "இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் கால்பந்தாட்டம் தொகுப்பு தான் இந்தப் படம்.
அந்தப் பயணத்தில் பல்வேறு முடிச்சுகளும் திருப்பங்களும் இருக்கும். படமாகப் பார்க்கும்போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும். கால்பந்தாட்டத்தையும் அதன் அசல் தன்மையோடு ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக இது இருக்கும்'' அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ''இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி அதாவது, 80% ஆந்திராவிலும், 20% தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது. நாட்டிலேயே கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேரை நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் இது "என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.