

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். அவரது பிறந்தநாளான இன்று படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியுடன் கைகோக்கிறார். படத்தின் தலைப்பு இன்னும் வெளியாக நிலையில், 'விஜய் 66' என அழைக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து திரைத்துறை வட்டாரத்தில் பல்வேறு கணிப்புகள் இருந்தன. பாலிவுட்டின் கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது 'விஜய் 66' படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் பிறந்த நாளான இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.