

'பொன்னியின் செல்வன்' படத்தில்தான் பெரும்பாலான காட்சிகளில் குதிரை மீது பயணம் செய்யும் வாய்ப்பு தனக்கு முழுமையாக கிடைத்தது என்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ’விருமன்’, ’சர்தார்’ உள்ளிட்ட படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அண்மையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் கார்த்தி ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனக்கு குதிரைகள் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். ’காஷ்மோரா’ படத்திற்காக முதன்முதலாக குதிரையேற்றம் கற்றுக்கொண்டாலும், ’பொன்னியின் செல்வன்’ படத்தில்தான் பெரும்பாலான காட்சிகளில் குதிரை மீது பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குதிரைகளுடன் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார். கூடவே குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.