Published : 04 Apr 2022 08:31 AM
Last Updated : 04 Apr 2022 08:31 AM

திரை விமர்சனம்: செல்ஃபி

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான் கடலூரைச் சேர்ந்த கனல் (ஜி.வி.பிரகாஷ்). நன்கொடை என்கிற பெயரில், தனது தந்தையிடமிருந்து 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதை, தாமதமாகத் தெரிந்துகொண்டு கொதித்துப் போகிறான். இதற்கான தீர்வென நம்பி, ‘மேனேஜ்மெண்ட் கோட்டா’வில் கல்லூரி சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் ‘புரோக்கர்’ வேலையில் நண்பர்களுடன் ஈடுபடுகிறான். இதே வேலையைத் தொழில்முறையாகச் செய்துவரும் மாபியா குழுவொன்றின் தலைவன் ரவிவர்மா (கவுதம் மேனன்). அவனுடைய வலைப் பின்னலை அறுத்துக் கொண்டு, ஒரு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கனல் ஊடுருவுகிறான். இதன்பிறகு கனலின் வாழ்க்கை எப்படித் தடம் புரண்டது? இறுதியில் என்ன ஆகிறான் என்பது கதை.

நடுத்தர வர்க்கத்தினருக்கு உயர்கல்வியை எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் கல்விக் கொள்ளை. பிள்ளைகளின் விருப்பம் பற்றி உணராமல், எப்படியாவது அவர்களை டாக்டராகவோ இஞ்சினியராகவோ ஆக்கிவிடத் துடிக்கும் பெற்றோரின் அறியாமையை, அழுத்தமாக ஆனால் மறைமுகமாகச் சாடுகிறது படம்.அப்படிப்பட்ட பெற்றோரின் அறியாமையைப் பயன்படுத்தி மாணவர் சேர்க்கையில் பெரும் கமிஷன் பார்க்கும் நிழலுலகம் இயங்கும் விதத்தை வேகமாக நகரும் திரைக்கதை, ‘கச்சாவான’ மேக்கிங் ஆகியவற்றின் துணைகொண்டு கவர்ந்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன்.

கமிஷனுக்காக இயங்கும் இவ்வகை மாபியா கும்பலொன்றுக்குள் ஒரு சிறு நகரத்து இளைஞன் புகுந்து, தன் புத்தியாலும் பலத்தாலும் வெற்றி பெறுவதை குறைவான சினிமாத்தனங்கள் கொண்ட காட்சிகளுடன் ஒரு ‘டாப்பிகல் மசாலா’வாக படத்தை நிறுவிட திரைக்கதை கைகொடுத்திருக்கிறது.

நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதலின் தொடக்கம், கதையின் மையப் பிரச்சினையை தொட்டுக் கொண்டு தொடங்குவது எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.

ஜி.வி.பிரகாஷ், கதை பேசும் பிரச்சினையின் முக்கியத்துவம் உணர்ந்து, கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தந்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சங்கிலி முருகனும் அவருடைய மருமகனாக வருபவரும் கவர்கிறார்கள். ரவி வர்மாவாக வரும் கவுதம் மேனன் வில்லன் நடிப்பில் அடுத்தடுத்த எல்லைகளைத் தொட முயல்வதை காண முடிகிறது.

முறைப்படுத்தி, களைந்தெறிய வேண்டிய பிரச்சினையை பட்டவர்த்தமாக வெளிச்சம்போட்டுக் காட்டிய வகையில், இந்த செல்ஃபி சுவாரஸ்யமான கவனிப்பைப் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x