Last Updated : 31 Mar, 2022 06:31 PM

Published : 31 Mar 2022 06:31 PM
Last Updated : 31 Mar 2022 06:31 PM

'கேஜிஎஃப் 2' vs 'பீஸ்ட்'... பாக்ஸ் ஆபீஸ் போட்டி பாதிப்பு என்ன? - சில உதாரணங்கள் | HTT Prime

'ஆர்ஆர்ஆர்' பட பிரமாண்ட வெளியீட்டுக்கு பிறகு திரையுலகில் சலசலப்பை உருவாக்கியுள்ள மிகப் பெரிய விஷயம் 'கேஜிஎஃப்: அத்தியாயம் 2' vs 'பீஸ்ட்' இடையேயான மோதல் தான். 2018-ல் வெளிவந்த 'கேஜிஎஃப்: அத்தியாயம் 1' படத்தின் மாபெரும் வெற்றியால், அதன் இரண்டாம் அத்தியாயமும் அதே பான் இந்தியா பாணியில் உகாதி பண்டிகை வெளியீடாக ஏப்ரல் 14-ல் வரவுள்ளது. யஷ் உடன் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பல மொழி நட்சத்திரங்கள் இணைந்திருப்பது அதற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளன.

அதேநேரம் விஜய், நெல்சன், பூஜா ஹெக்டே இணைந்துள்ள 'பீஸ்ட்' தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக ஏப்ரல் 13-ல் வரவுள்ளது. விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மாஸ்டர்' படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், கேரளா உள்ளிட்ட இடங்களையும் தாண்டி இந்தி வரை வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதனால் ஏற்பட்ட ஹைப் காரணமாக 'பீஸ்ட்'க்கான எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது.

விஜய் மற்றும் யஷ் என இருவரின் ரசிகர்களும் தங்களின் ஆதர்ச நாயர்கள் படங்களை பெரிய திரைகளில் பார்க்க ஆர்வமாக உள்ள நேரத்தில், இந்த இரண்டு பெரிய படங்களின் நேரடி மோதல் பாக்ஸ் ஆபிஸில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட திரைத்துறையினர் பலரின் கவலையாக மாறியுள்ளது. இரண்டு பெரிய படங்கள் மோதும்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாதிக்கப்படும் என்பதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள், நேரடி சம்பவங்கள் உள்ளன.

2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' என இரண்டு உச்ச நடிகர்களின் படங்கள் நேரடியாக மோதின. இதில் வின்னராக மாறியது அஜித்தின் 'விஸ்வாசம்'. ரஜினியின் 'பேட்ட' படத்தை பொறுத்தவரை மிக மிக மோசமான விமர்சனங்கள் எதுவும் இல்லை. அதேநேரம் வின்டேஜ் கால ரஜினியாக நடித்திருந்தார். எனினும், விஸ்வாசத்தின் குடும்ப சென்டிமென்ட் 'பேட்ட' படத்தை மழுங்கடித்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தது. இதேதான் அஜித்தின் 'வீரம்' மற்றும் விஜய்யின் 'ஜில்லா' விஷயத்திலும் நடந்தது.

மிக சமீபத்தில் இதற்கு இன்னொரு உதாரணம். கடந்த டிசம்பரில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' மற்றும் ரன்வீர் சிங்கின் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான '83'. 'புஷ்பா'வை ஒப்பிடும் போது '83' படம் இந்தி மொழி ஆதிக்கம் மிக்க மாநிலங்களில் மிகக்குறைவான வசூலையே பெற்றது. இத்தனைக்கும் விமர்சன ரீதியாக 83 கொண்டாடப்பட்டது. ஆனால், அதனை தாண்டி பான் - இந்தியா பிரச்சாரம், வாய் மொழி பேச்சுகளும் 'புஷ்பா'வுக்கான வரவேற்பை எங்கோ கொண்டுசென்றதுடன் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் எகிறியது.

எனவேதான் இதுபோன்ற ஒரு மோதலுக்கு கேஜிஎஃப் vs பீஸ்ட் வித்திடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் இந்த மோதலை குறைத்து மதிப்பிடுகிறார்களோ என்ற உணர்வும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இரண்டு திரைப்படங்களை பொறுத்தவரையும் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். கரோனா சூழலால் இரு படங்களும் மோதலை தவிர்க்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் வெளியீட்டை தள்ளிவைப்பது சிரமமான ஒன்று என தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்கின்றன.

இந்த நியாயங்கள் ரியாலிட்டி உடன் ஒத்துபோகுமா என்பது தான் இப்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி. தமிழ்நாட்டில் இருக்கும் 1200 திரைகளில் 800 முதல் 850 திரைகள் வரை பீஸ்ட் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டைத் தாண்டி கேரளாவிலும் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் காரணமாக அங்கும் பீஸ்ட் அதிகமான எண்ணிக்கையில் திரையிடப்படலாம். இந்த இரு மாநிலங்களிலும் 'பீஸ்ட்' படத்துக்கு போகவே 'கேஜிஎஃப்' படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாஸ்டருக்கு வெற்றிக்கு பிறகு விஜய்க்கு ஒரு சோதனை முயற்சியாக 'பீஸ்ட்' படத்தை பல மொழிகளில் டப் செய்து ஒரேநேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இந்த முயற்சிக்கு தடையாக 'கேஜிஎஃப்' வெளியீடு இருக்கலாம். ஏனென்றால், கர்நாடகாவிலும், தெலுங்கு பகுதிகளிலும், வட இந்திய பகுதிகளிலும் இதற்கு நேர்மாறாக இருக்க வாய்ப்புள்ளது. கர்நாடக யஷ்ஷின் சொந்த மாநிலம் என்பதாலும், வட இந்திய மாநிலங்களில் கேஜிஎஃப் முதல் பாகம் அடைந்த வெற்றியின் காரணமாகவும் அதற்கு நிறையவே எதிர்பார்ப்புகள் உள்ளது. தெலுங்கு தேசத்திலும் இதே எதிர்பார்ப்பு நிலவுவதால், அங்கு கேஜிஎஃப் படத்துக்கு போகவே பீஸ்ட்டுக்கு திரைகள் கிடைக்க வாய்ப்புள்ளன என்பதே நிதர்சனம்.

இதுபோன்ற காரணங்களையும் வசூலையும் முன்வைத்து இரண்டு படங்களையும் தனித்தனியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்களும், சினிமா வர்த்தர்களும். "இரண்டு படங்களும் பெரிய அளவில் பார்வையாளர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பொதுவாக இதுபோன்ற பெரிய படங்கள் ஒன்றுக்கொன்று மோத வேண்டியதில்லை. மோதல் இல்லாமல் தனித்தனியாக வந்தால் எல்லா திரையரங்குகளிலும் இரண்டு படங்களும் ஹவுஸ்புல் ஆகியிருக்கும்.

இரண்டில் ஏதேனும் ஒரு படத்தில் வெளியீட்டை ஓரிரு வாரங்கள் தள்ளிப் போட்டிருக்கலாம் . 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவந்தபோது இயக்குநர் ராஜமௌலி பட்ஜெட் மற்றும் வசூல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தனது படத்துடன் மோதவிருந்த படங்களின் தயாரிப்பாளர்களை நேரில் அணுகி அந்ததந்தப் படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க கோரினார். ஒரு பெரிய படம் என்ற அடிப்படையில் அவர் மற்ற படங்களுடன் மோதியிருக்கலாம். ஆனால் அவர் அனைவரின் நலன் கருதி படத் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான விளைவுகளை சுட்டிக்காட்டினார்.

அதேபோல், 'கேஜிஎஃப் 2' vs 'பீஸ்ட்' விஷயத்திலும் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை ஓரிரு வாரங்கள் தள்ளிப்போட்டிருந்தால், இரண்டுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ரஜினி காந்தின் 'அண்ணாத்த' மற்றும் விஷாலின் 'எதிரி' படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் என்ற நிலை வந்தபோது இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் கைகொடுத்ததை தயாரிப்பாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் ரமேஷ் பாலா மற்றும் ஸ்ரீதர் பிள்ளை இருவரும்.

தியேட்டர் அதிபர்களும், சினிமா வர்த்தகர்களும் இரண்டு படங்களின் போட்டி குறித்து கவலை தெரிவித்தாலும், படக்குழுவினரை இதை ஆரோக்கியமான போட்டியாகப் பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் சமீபத்திய உரையாடல்களே வெளிப்படுத்துகின்றன.

'கேஜிஎஃப்' டிரெய்லர் வெளியீட்டின் போது பீஸ்ட் மோதல் குறித்த கேள்வியை எதிர்கொண்ட யஷ், "இது கேஜிஎஃப் Vs பீஸ்ட் என்பது கிடையாது. இதனை கேஜிஎஃப் அண்டு பீஸ்ட் என்றுதான் பார்க்க வேண்டும். இது ஒன்றும் தேர்தல் கிடையாது. தேர்தலில் தான் ஒருவரின் வாக்கை வாங்க சண்டை நடக்கும். இது சினிமா. சினிமாவில் என்னுடைய படத்தையும் பார்க்கலாம். விஜய் சாரின் படத்தையும் பார்க்கலாம்" என்று இரண்டு படங்களும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதேபோல் நெல்சன் திலீப்குமார், 'கேஜிஎஃப்' டிரெய்லரை பாராட்டி டுவீட் பதிவிட, அதற்கு பதிலாக பிரசாந்த் நீல் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துடன் 'பீஸ்ட்' அப்டேட் கேட்டு பரஸ்பர நட்புறவை வெளிப்படுத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதும் ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர்களின் ஆரோக்கியமான உரையாடலை போலவே பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் ஆரோக்கியமான வசூலை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x