என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்றவர்கள் சென்னை மக்கள்: விக்ரம் புகழாரம்

என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்றவர்கள் சென்னை மக்கள்: விக்ரம் புகழாரம்
Updated on
1 min read

என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் சென்னை மக்கள் என்று விக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பரில் கடும் மழையால் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் பல இடங்களில் மூழ்கின. சென்னை மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்தது மட்டுமன்றி நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்கள் மூலமாக உதவிகள் செய்தனர்.

சென்னை மக்களின் மனிதநேயத்தை முன்வைத்து நடிகர் விக்ரம் 'SPIRIT OF CHENNAI' என்ற பெயரில் பாடல் ஒன்றை உருவாக்கினார். அப்பாடலை அபிஷேக் பச்சன், ப்ருத்விராஜ், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் ஒன்றிணைந்து இந்த பாடலில் நடனமாடி இருக்கிறார்கள். இதனை விக்ரம் இயக்கி இருக்கிறார்.

இப்பாடல் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்து விக்ரம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப் படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த மழை.

இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது.

வெள்ளத்திற்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள். சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.

எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல் உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக நான் பார்த்தேன். மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் விக்ரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in