

'கலகலப்பு 2' குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் குஷ்பு விளக்கம் அளித்திருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கலகலப்பு'. இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 2012ம் ஆண்டு இப்படம் வெளியானதில் இருந்தே இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் 'கலகலப்பு 2' உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்திக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
"சுந்தர்.சி + ஆர்யா + நயன் = கண்டிப்பாக வெற்றி தான். 'கலகலப்பு 2' குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
மேலும், சுந்தர்.சி தற்போது மலையாளப் படமான 'வெள்ளிமூங்கா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறும் தருவாயில் இருக்கிறது.