Published : 21 Mar 2022 12:49 PM
Last Updated : 21 Mar 2022 12:49 PM

திரை விமர்சனம்: குதிரைவால்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சரவணன் (கலையரசன்) வங்கிஊழியர். புகை, மதுப் பழக்கம் கொண்ட அவர், உண்மைக்கும் பிரமைக்கும் நடுவில் ஊடாடும்உளவியல் சிக்கல் கொண்டவர். ஒருநாள் கனவு கலைந்து தூக்கத்தில் இருந்து விழிக்கும் அவர்,தனக்கு குதிரைவால் முளைத்திருப்பதாக நினைத்துக்கொள்கிறார். தனக்கு ஏன் வால் முளைத்தது, அந்த கனவின் பொருள் என்ன என்பதற்கான காரணத்தை அறிய பலரிடம் செல்கிறார். இப்பயணத்தில், தனது பால்ய நாட்களைநினைவுகளின் வழியாக மீட்டெடுக்கும் அவர், அதில் தனது கனவுக்கான பொருளையும் குதிரைவால் முளைத்த காரணத்தையும் அறிந்தாரா? அவரது உலகம் எதார்த்தமானதா என்பதற்கு பதில் சொல்கிறது கதை.

வால் முளைத்ததாக உணர்ந்ததும், அது மனப்பிறழ்வாக இருக்கமுடியாது என்று நம்பும் நாயகன், மனநல மருத்துவரிடம் செல்வதில்லை என்று முடிவெடுக்கிறார். மாறாக, கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் ஒரு பாட்டி, ‘காலம் சென்ற’ பக்கத்து வீட்டுக்காரரான பாபு, தனது கணித ஆசிரியர், மலையாள ஜோதிடர், எம்ஜிஆர் வந்துகைநனைத்துச் சென்ற வீட்டில்இருக்கும் ஒரு பாட்டி என நிஜமனிதர்கள், அரூப மனிதர்கள் பலரையும் அவர் எதிர்கொள்ளும்போது, தொன்மங்களின் வழியாக அவர்கள் பதிலளிக்க முயற்சிக்கின்றனர். அவர்களது பதில்கள் மூலம், நாயகனின் புரிதலையும், பார்வையாளர்களின் புரிதலையும் இணைக்க முயற்சிக்கிறது படம்.

பார்வையாளர்களின் வயது,அவர்களது வாழ்க்கை அனுபவம், வாசிப்பு அனுபவம், சினிமா ரசனை ஆகியவற்றைப் பொருத்து, காட்சிகளின் பொருளை விளங்கிக்கொள்ள முடிகிறது.

சரவணனாக நடிக்கும் கலையரசன், வால் முளைத்த பிறகு, அது,சதா துடித்துக்கொண்டும், விசிறிக்கொண்டும் இருக்கும்போது உடல்மொழியில் ஏற்படும் மாற்றங்களை நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்தை சிறப்பிக்கிறார். சேத்தன், அஞ்சலிபாட்டீல், ஆனந்த்சாமி, சவுமியா,மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி என துணை கதாபாத்திரங்களில் வருவோரும் சிறப்பாக நடிக்கின்றனர்.

மேஜிக்கல் ரியலிசம் எனும் சிக்கலான திரைமொழியை கையாள துணிந்ததற்காகவே அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இருவரையும் பாராட்டலாம். கலை இயக்கம் (ராமு தங்கராஜ்), ஒளிப்பதிவு (கார்த்திக் முத்துகுமார்), ஒலி வடிவமைப்பு (அந்தோனி பி.ஜே. ரூபன்), இசை (பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர்) ஆகியவற்றின் நுட்பமான பங்களிப்பும் சிறப்பு.

நாயகனுடைய பிரமைக்கான பின்னணி காரணத்தை அழுத்தம் திருத்தமாக அமைக்க தவறுகிறார் படத்தின் எழுத்தாளர் ஜி.ராஜேஷ். படத்தின் உரையாடலும், காட்சிமொழியும் பெரும்பாலான இடங்களில் இலக்கியப் பிரதியின் தன்மையில் நகர்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது மதிப்பு வைத்து இப்படி ஒரு கதை அமைத்த துணிச்சலுக்காகவே தட்டிக் கொடுக்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x