

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'கான்' படம் கைவிடப்படவில்லை, விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் செல்வராகவன் விளக்கம் அளித்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கத்ரீன் தெரசா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கான்'. யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தார்கள்.
சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடித்துவிட்டு இப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் சிம்பு. யாரும் எதிர்பாராத நிலையில் 'கான்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் மறுபடியும் அப்படம் தொடங்கப்படும் என்று செல்வராகவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செல்வராகவனின் 'கான்' படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து செல்வராகவன் " நான் ஒரு இயக்குநர், படங்களை உருவாக்குவது என் பணி. மற்றவர்களோடு 'ஒத்துழைத்துப் போவது' அல்ல.
அதுமட்டுமன்றி நான் 'கான்' படத்தை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கவே இல்லை. படக்குழுவினர் ஒன்றாக இணைந்து மகிழ்சியாக பணியாற்றினோம். சிம்பு சரியான நேரத்திற்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சில சூழ்நிலைகளால் அப்படத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். விரைவில் 'கான்' தொடங்கப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.