

'மனிதன்' என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி, வரிச்சலுகை அதிகாரிகள் இப்படத்திற்கு வரிச்சலுகையை மறுத்திருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் 'மனிதன்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அஹ்மத் இயக்கி இருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியவுடன், இப்படத்திற்கு வரிச்சலுகைக் கோரி தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தது. 'மனிதன்' படத்தை பார்த்த வரிச்சலுகைக் குழு, இப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஏன் என்று விசாரித்த போது 'மனிதன்' என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல. சமஸ்கிருத வார்த்தை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், வரிச்சலுகை குழுவின் இந்த முடிவை எதிர்த்து, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கு முன்பு உதயநிதி தயாரித்த படங்களுக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.