Published : 02 Mar 2022 09:11 AM
Last Updated : 02 Mar 2022 09:11 AM

ஆன்மிக சிந்தனையின்றி இசையமைக்க முடியாது: யுவன் சங்கர் ராஜா கருத்து

சென்னை: ஆன்மிக சிந்தனை இல்லாமல்இசையமைக்க முடியாது.அனைத்து இசையமைப்பாளருக்கும் ஆன்மிக எண்ணம் இருக்கும் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.

சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ திரைப்படம் மூலம் 1997-ம் ஆண்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

இத்தனை ஆண்டுகளாக இசைத் துறையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. என் குழுவினர், உடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி.இந்த சூழலில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை நினைவுகூர்கிறேன்.

‘யுவனிஸம்’ பற்றி கேட்கிறீர்கள். நடிகர் விஜய்யின் மேலாளர் ஒருபுகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். அது, விஜய் மகன் ‘யுவனிஸம்’ என்ற டி-சர்ட் அணிந்திருந்த புகைப்படம். அதற்கு, என்னபதில் சொல்வது என்று தெரியாமல், ‘அருமை’ என்று மெசேஜ் அனுப்பினேன். பிறகு, விஜய்யை சந்தித்தபோது, ‘‘நான்தான் அந்தபுகைப்படத்தை அனுப்பச் சொன்னேன். என் மகன் உங்களது பயங்கரமான ரசிகன்’’ என்றார். தலைமுறைகள் கடந்தும் என் பாடல்கள் ரசிக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்தேன். எனினும், இசையில் இன்னும்அதிகம் செயல்பட வேண்டும்.

நான் நடிக்க வருவேனா? என்று கேட்கிறீர்கள். இசை ஆல்பத்தில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன். பெண்களை மையப்படுத்தி ஒரு கதை எழுதியுள்ளேன். படம் இயக்கவும் இருக்கிறேன். சிம்புவுடன் இணைந்து வீடியோஆல்பம் செய்ய உள்ளோம்.

ஆன்மிக சிந்தனை இல்லாமல் இசையமைக்க முடியாது.அனைத்து இசையமைப்பாளருக்கும் ஆன்மிக எண்ணம் இருக்கும். ஒரு டியூன் போடுகிறோம். அது இவ்வளவு பேரை போய் சேர்கிறது. அதை நான்தான் போட்டேனா? இது எப்படி வந்தது? என்றுயோசிக்கும்போது அந்த தேடல் ஆன்மிகத்துக்கு கொண்டு செல்லும். என் அம்மாவின் இழப்பில் இருந்துதான் எனக்கு அது தொடங்கியதாக நினைக்கிறேன். என் தந்தை இளையராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது கொடுப்பதுபற்றி கேட்கிறீர்கள். கட்டாயம் அவருக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அவரது மனைவி ஷாஃப்ரூனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x