

வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா நேற்று முன் தினம் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.
இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத் திருந்தார் இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.
வீணை எஸ்.பாலசந்தரின் படங்களிலிருந்து சில காட்சிகள் குறித்து நடிகர் மோகன்ராம் பேசும்போது, “எஸ்.பாலசந்தர், 1937-ல் வெளிவந்த சீதா கல்யாணம் திரைப்படத்தில், ராவணன் சபையில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்திருப்பார். 1948-ல் வெளிவந்த எஸ்.பாலசந்தரின் `இது நிஜமா?’ படத்தின் பிரதிகள் இன்றைக்கு நம்மிடையே இல்லை. மிகச் சிறந்த நுட்பமான திறமைமிக்க இயக்குநராக அந்த நாளிலேயே புகழப்பட்டவர் எஸ்.பாலசந்தர்” என்றார்.
“டைரக்டர் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாற்காலியில் வேறு எவரும் உட்காரக் கூடாது என்னும் நடைமுறையை கொண்டுவந்தவர் எஸ்.பாலசந்தர்தான்” என்றார் அவரின் படங்களுக்கு எடிட்டிங் செய்திருக்கும் எடிட்டர் மோகன்.
“டைரக்டர் எஸ்.பாலசந்தர் மீது எனக்கு அளவு கடந்த பக்தி உண்டு. உதிரிப்பூக்கள் படம் வந்திருந்த நேரம், என்னை அவரது இல்லத்துக்கு அழைத்து, `இதுவரை 9 முறை உதிர்ப்பூக்கள் படத்தைப் பார்த்துவிட்டேன்..’ என்று மனம் திறந்து பாராட்டியதை என் வாழ்நாளில் நான் செய்த பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்றார் இயக்குநர் மகேந்திரன்.
இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “நானும் ராமனும் (எஸ்.பாலசந்தரின் மகன்) பால்யகால நண்பர்கள். எங்களின் நைட்-ஸ்டடி பெரும்பாலும் சினிமா பார்ப்பதில்தான் முடியும். சைக்கிளில்தான் போவோம். அப்படி போகும்போது, சில சமயங்களில் எஸ்.பி.சாரின் கார் தியேட்டர் வாசலில் நுழைவதைப் பார்த்தால் தெறித்து ஓடிவிடுவோம். எங்களின் சினிமா பார்க்கும் ஆவல் இப்படியே வளர்ந்து வந்தது.
நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது, பல ஆண்டுகளுக்குப் பின், எஸ்.பி. சார் மீண்டும் படம் எடுக்கப் போகிறார் என்று அறிந்தோம். அந்தப் படத்துக்கு நாங்கள்தான் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் என்று நாங்களாகவே முடிவு செய்துகொண்டோம். அந்தப் படத்தில் கமல்ஹாசன்தான் நடிக்கப் போகிறார் என்றும் அறிந்தோம். ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
கடல் அலையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் ஒரு இளைஞனின் அருகில் ஒரு நாளிதழின் தாள் பறந்து வரும். அதை ஆர்வமில்லாமல் அதைப் படிப்பார் அந்த இளைஞர். அதில் கலங்கரை விளக்கத்தின் கீழ் மர்மமான முறையில் ஒருவர் இறந்திருக்கும் செய்தி இருக்கும். எதேச்சையாக நாளிதழின் தேதியைப் பார்ப்பார். அதிலிருக்கும் தேதி, இரு நாட்களுக்குப் பிறகு வரும் நாளிதழின் தேதியாக இருக்கும். அந்தச் செய்தியில் படித்தது போலவே, 2 நாட்களில் கலங்கரை விளக்கத்தின் அருகே ஒருவர் இருந்திருப்பதை, அந்த இளைஞன் பார்ப்பான். இப்படியொரு கதையை இன்றைக்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்தால் ஆச்சரியமில்லை. ஆனால் 35 ஆண்டுகளுக்குமுன் இப்படி எஸ்.பாலசந்தர் யோசித்திருக்கிறாரே அதுதான் ஆச்சரியம்” என்றார்.
எஸ்.பாலசந்தரின் படங்களிலிருந்து சில பாடல்களை பாரதி இசைக் குழுவினர் பாடினர். எஸ்.பி.எஸ்.ராமன் `அந்த நாள்’ படத்தைச் சுருக்கமாக நாடக வடிவில் எழுதியிருந்தார். விழா மேடையில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், பாலசந்தரின் படத்தைப் பார்க்காதவர்கள் அந்தப் படத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவியது.
எஸ்.பாலசந்தரின் மனைவி சாந்தா, “என்னுடைய கணவரை எல்லோரும் கண்டிப்பானவர். அதிகம் கோபப்படுவார் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், காரணமில்லாமல் கோபப்பட மாட்டார். எந்த அளவுக்கு அவருக்கு கோபம் வருமோ அந்தளவுக்கு அவரிடம் நகைச்சுவை உணர்வும் இருந்தது” என்றார்.
</p><p xmlns=""><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/6G8PjyMmD7g" frameborder="0" allowfullscreen="" /></p>