

கிரிக்கெட் வீரர் தோனியை இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நேற்று (பிப்.20) விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோவை நான் சந்தித்த போது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை ஒரு கேப்ஷனால் விளக்கமுடியாது. அவரை சந்தித்தது, அவருக்கு ஆக்ஷன் சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது தொடர்பான ஒரு அழகிய கதை விரைவில்... வாழ்க்கை அழகானது என்பதை இந்த தருணம் எனக்கு உணர்த்தியது. இதை சாத்தியமாக்கிய பிரபஞ்சத்துக்கு நன்றி.
இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
ஐபில் தொடருக்கான சிஸ்கே தொடர்பான விளம்பர விடியோவை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தனது மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.