

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்தை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 169-வது படம்: கடந்த பிப்.10-ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதன்படி ரஜினியின் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதும், அந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரஜினியின் 170-வது படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கப் போவதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா அந்த படத்துக்கு இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில், ரஜினியின் 170-வது படத்தை இயக்குநரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரஜினிகாந்துக்காக அருண்ராஜா காமராஜ் ஒரு கதை தயாரித்திருக்கிறார். அந்த கதையை பாலிவுடன் தயாரிப்பாளர் போனி கபூரிடம் கூறியுள்ளார். போனி கபூர் மூலம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ரஜினிக்கு கதை சொல்லியதாகவும், அந்த கதைக்கு ரஜினி ஓகே சொல்லியுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 என்ற படத்தின் ரீமேக்கை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற நெருப்புடா, நெருங்குடா என்ற பாடலை எழுதியிருந்தார்.
இந்நிலையில், இந்த தகவல்களை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரஜினி சாரும் நானும் பல வருட நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். நாங்கள் இணைந்து ஒரு படம் எடுப்பதாக இருந்தால், அதை முதலில் அறிவிப்பது நானாகத்தான் இருப்பேன். இதுபோன்ற கசிந்த தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.