

'புறம்போக்கு' படத்தின் காட்சிக்காக 2 மணி நேரத்தில் ஒட்டகம் ஒட்ட கற்றுக் கொண்டு, உடனே காட்சியில் நடித்ததிற்காக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கார்த்திகாவை பாராட்டினார்.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'புறம்போக்கு'. முதல் பிரதி அடிப்படையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி தயாரித்து வருகிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் உள்ளிட்டவர்களுக்கு போட்டியாக சண்டை பயிற்சிகள் கற்றுக் கொண்டு, சண்டை காட்சிகள் எல்லாம் நடித்து இருக்கிறார்.
‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு காட்சியில், கார்த்திகா ஒட்டகம் ஒட்ட வேண்டும் என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியிருக்கிறார். இயக்குநர் கூறிவிட்டார் என்று உடனே, 2 மணி நேரத்தில் ஒட்டகம் ஒட்டக் கற்றுக் கொண்டு அன்றைய தினமே அக்காட்சியிலும் நடித்து கொடுத்திருக்கிறார்.
கார்த்திகாவின் இந்த முயற்சியினை இயக்குநர் மட்டுமன்றி 'புறம்போக்கு' படக்குழுவும் வெகுவாக பாராட்டியிருக்கிறது.