

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் சில தினங்கள் முன் வெளிவந்த படம் 'மகான்'.
'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர். மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகள் புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவர், திடீரென மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுவதும் அதன்பிறகு அவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என விரிகிறது மகான் கதை.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் மலையாள பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், இந்தப் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அல்போன்ஸ் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளதில், "மகான் ஒரு புத்திசாலித்தனமான படம். அன்னியனுக்குப் பிறகு சரியான முறையில் பயன்படுத்தியதற்கு நன்றி சுப்பு. நடிப்பில் ஜிகர்தண்டாவை தாண்டி வந்துவிட்டீர்கள் பாபி. துருவ்வின் தாதா கேரக்டர் மிகவும் சுவாரசியமாக இருந்தது" என்று குறிப்பிட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தப் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.