

மோகன்தாஸ் (ஆடுகளம் நரேன்) ஒரு காந்தியவாதி. தன் மகனுக்கு காந்திமகான் (விக்ரம்) என்று பெயரிட்டு வளர்க்கிறார். தனிப்பட்ட ஆசாபாசங்களை அனுபவிக்க முடியாமல், அவற்றை கனவில் மட்டுமே வாழ்ந்து பார்க்கும் காந்திமகானுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் அமைகிறது. குடி, புகை, சூதாட்டம் என அந்த ஒரு நாள் கொண்டாட்டம் அவனது வாழ்க்கையின் திசையை மாற்றிவிடுகிறது. சாராய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாகும் அவனைவிட்டு மனைவியும், மகனும் பிரிகின்றனர். பிரிந்து சென்ற மகன் ஒரு நாள் திரும்பிவந்து காந்திமகானின் தலைக்குமேல் கத்தியாக தொங்குவதுதான் கதை.
காந்திமகானாக அப்பா விக்ரம், தாதா என்கிற கதாபாத்திரத்தில் மகன்துருவ். இருவரும் ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்துகின்றனர். விக்ரமின் தோற்றங்களும், வாழ்க்கையை எல்லாவிதத்திலும் அனுபவிக்க நினைக்கும் அவரது துடிப்பும், தன்னுடைய பாவங்கள் மகனுடைய உருவில் வளர்ந்து வந்து மிரட்டும்போது, மகனைக் கொல்லமுடியாமல் தவிக்கிற தவிப்பும் அவரை நடிப்பு ராட்சசனாக காட்டுகின்றன.
அதேபோல, அப்பாவுக்கு எதிராக வந்து நின்று, ‘‘நா அம்மா புள்ள.. திடீர்னு எப்புடி அப்பா பேச்ச கேக்குறது..? பையன் மாதிரி ஒருத்தனுக்காக பையனையே கொல்ல விடுவியா நீ’’ என்று கேட்டு விக்ரமிடம் சீறும் இடத்தில் நடிப்பிலும் சீறியிருக்கிறார் துருவ்.
தனது சாம்ராஜ்ஜியத்தின் கூட்டாளி மகன் கொல்லப்படும் தருணத்தில், அப்பாவும் பிள்ளையும் மோதிக்கொள்ளும் காட்சியில் திரையில் தீப்பிடிக்காத குறை.
விக்ரம், துருவ் இருவரும் நடிப்பில் போட்டி போடுகின்றனர் என்றால், அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் சத்யவானாக பாபி சிம்ஹாவும், அவரதுமகன் ராக்கியாக சனத்தும் எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்கின்றனர். மற்றொரு காந்தியவாதியின் மகள் நாச்சியாக வரும் சிம்ரனின் நடிப்பு, முதன்மை வில்லனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முத்துகுமாரின் வஞ்சக அரசியல்வாதி நடிப்பு என துணை கதாபாத்திரங்களில் வருபவர்களும் நச்!
தன் அறிவுக்கு எட்டிய காந்தியத்தை மட்டும் திரைக்கதைக்குள் ஊறுகாய்போல தொட்டுக்கொண்டு, அப்பா - பிள்ளைகளுக்கு இடையிலான ஆடுபுலி ஆட்டத்தை சுவாரஸ்யமாக ஆட முயற்சித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனால், காட்சி ஊடகமான சினிமாவில், வானொலி நாடகக் காட்சிபோல நீளமான வசனங்கள் வைத்திருப்பதை குறைத்தும், இழுவையான கிளைமாக்ஸ் காட்சியை மட்டுப்படுத்தியும் இருந்தால் மகானுக்கு உண்மையாகவே ‘வாழ்க’ கோஷம் போட்டிருக்கலாம்!