

கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, அதற்கேற்ற வேலை கிடைக்காமல் அல்லாடுகிறார் இர்ஃபான் அகமது (விஷ்ணு விஷால்). பாசமான தாய், நட்பை பொழியும் நண்பர்கள் என எளிய குடும்பத்து இளைஞனாக வலம் அவர், நாட்டுப்பற்று மிக்கவர். ஆனால், சந்தர்ப்பவசத்தால், தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வந்திருக்கும் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு, தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்படுகிறார். கொதித்தெழும் இர்ஃபான், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க என்ன செய்தார்? உண்மையான தீவிரவாதி சிக்கினாரா என்பது கதை.
மத அடிப்படையில் தீவிரவாத முத்திரை குத்தும் நோய்க்கூறு மனநிலைக்கு சம்மட்டி அடி கொடுக்கிறது இப்படம். தான் வாழ்கிற, தன்னை வாழ வைக்கிற ஊருக்கு பேரழிவை ஏற்படுத்த நினைக்கும் தீவிரவாத சக்தி எதுவாக இருந்தாலும், உண்மையான குடிமகன் உயிரைக் கொடுத்தாவது அதை தடுத்து நிறுத்துவான் என்பதை, ஆக்ஷன் காட்சிகள் மூலம் சித்தரித்து அசரடிக்கிறார் அறிமுக இயக்குநர் மனு ஆனந்த்.
காட்சிப்பூர்வமாக நம்பகத் தன்மையை கொண்டுவர, நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டது, ஆக்ஷன் காட்சிகளை புதுமையாக யோசித்து வடிவமைத்தது போன்றவை படத்துக்கு விறுவிறுப்பையும் ‘ஃபிரெஷ் லுக்’கையும் தருகின்றன.
சர்ச்சைக்குரிய ஒரு கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து அதை தயாரித்துள்ளதுடன், இர்ஃபான் அகமது எனும் கதாபாத்திரமாக தன்னை வெளிப்படுத்துவதில் முழு வெற்றி பெறுகிறார் விஷ்ணு விஷால். தீவிரவாதி என சூழ்நிலைக் கைதியாக ‘புட் அப்’ செய்யப்படும்போது, அவர் முகத்தில் காட்டும் பதற்றமும், தவிப்பும் ஒரு தேர்ந்த நடிகனுக்கு உரியவை!
ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் ஆகிய 3 கதாநாயகிகளும் கதாபாத்திரங்களாக வந்துஅசத்துகின்றனர். இதுவரை நடித்ததிலேயே ரைசாவுக்கு இதுதான் உருப்படியான ரோல்! விஷ்ணு விஷாலின் அம்மாவாக வரும் மாலா பார்வதி அவ்வளவு இயல்பு கூட்டுகிறார். தேசியப் புலனாய்வு முகமையின் தலைவராக வரும் கவுதம் மேனன் காட்டுவது ஹை-கிளாஸ் கெத்து. அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு என வரும்போது, பிரதமருக்கும், தனக்கு கீழே முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ‘பிளான் பி’யை அவர் தன்னிச்சையாக செயல்படுத்துவதாக காட்டும்போது, சொர்ரென்று எல்லாம் இறங்கிவிடுகிறது. இந்த லாஜிக் குறையை தவிர, ஒரு உருப்படியான ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் பார்த்த உணர்வை கொடுத்துவிடுகிறது இந்த ‘எஃப்.ஐ.ஆர்’.