

விளைநிலங்கள் அத்தனையும் வீட்டுமனை வியாபாரிகளின் கைக்கு போய்விட்ட கிராமம் அது. அங்கு, தனது துண்டு நிலத்தை பத்திரமாக பாதுகாத்து, சொந்த உடல் உழைப்பில் விவசாயம் செய்கிறார் 80 வயது மாயாண்டி (நல்லாண்டி). அதிக விலை தருவதாக ஆசைகாட்டியும் நிலத்தை விற்க மறுத்துவிடுகிறார். இதற்கிடையே, குலதெய்வக் கோயில் திருவிழாவை நடத்த,ஊர் மரபுப்படி, படையலுக்கு நெல்மணிகளை விளைவித்துத் தருமாறு மாயாண்டியிடம் மக்கள் கேட்கின்றனர். அதை ஏற்று உழவு செய்கிறார் அந்த கடைசி விவசாயி. ஆனால், தருணம் பார்த்திருந்த மனித நரிகள், அவர் 3 மயில்களை கொன்று புதைத்ததாக போலீஸில் புகார் கொடுக்கின்றனர். கைது செய்யப்படும் மாயாண்டி சிறை மீண்டாரா? கோயில் திருவிழா நடந்தா? அவர் விதைத்த நாற்றுகள் என்ன ஆகின என்பது கதை.
இந்த படம், வீட்டுமனை வியாபாரிகளிடம் விளைநிலங்கள் சிக்கி பாலை நிலமாகும் கள எதார்த்தத்தை மிகையின்றி, போதிய புரிதலுடன் நம்முன் வைக்கிறது. விவசாயமும், அதை சார்ந்திருக்கும் விவசாயியின் வாழ்க்கையுமே ஒரு ஊரின் அடிப்படை ஜீவன் என்பதை பார்வையாளரின் மனதுக்குள், பிரச்சாரமின்றி ஒரு மவுன சாட்சியாக பதிய வைத்துவிடுகிறார் படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் மணிகண்டன்.
உண்மையான, அனுபவம் மிக்க விவசாயி ஒருவரையே முதன்மை கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்திருப்பதால், அவர் நடிப்பதற்கான அவசியமின்றி, சொந்த வாழ்க்கையையே வாழ்ந்திருப்பது படத்தின் மிகப்பெரிய நேர்மையும், உண்மையுமாக பளிச்சிடுகிறது. படம் நெடுகிலும் கிராமத்து மனிதர்களின் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி என வாழ்க்கையில் இருந்து ஊற்றெடுக்கும் நகைச்சுவை கரைபுரண்டு ஓடுகிறது.
மாயாண்டியின் நிலத்தில் நடவு நட ஒருவர்கூட வராமல், ஊரில் உள்ள அனைவரும் எங்கே போனார்கள் என்று தேடிச் செல்லும் கேமரா காட்டும் உண்மை சுடவே செய்கிறது.
திரைக்கதைக்கு விஜய்சேதுபதி, யோகிபாபு அவசியமில்லைதான். ஆனால், இன்றேவிவாதித்து நிலங்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் இருக்கும் உயிர் பிரச்சினையை உணரவைக்கும் ஒரு நேர்மையான சினிமாவுக்கு, தெரிந்த சினிமா முகங்களின் தேவை அவசியமாகிறது. அவர்களையும் கதாபாத்திரங்களாக காட்டி,தன் முத்திரையை பதிக்கிறார் இயக்குநர்.