

இந்தியாவில் மேலோட்டமான பார்வையுடன் இஸ்லாமியர்கள் அந்நியமாக ஒதுக்கப்படுவதும், அவர்களை தீவிரவாதிகள் என்று பொதுபுத்தியில் முத்திரைக் குத்தப்படுவதையும் உடைக்க முற்பட்டிருக்கும் இயக்குநர் மனு ஆனந்த் அதில் வெற்றிகண்டாரா..? - இதோ ’எஃப்ஐஆர்’ திரைப்படத்தின் முதல் பார்வை...
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அபுபக்கர் தலைமையில் தமிழகத்தில் சதிவேலைகளுக்கு திட்டமிடப்படுகிறது. அபுபக்கரை தேடும் என்ஐஏ, தவறுதலாக சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இளைஞர் இர்பான் அஹமதுவை ஓர் இஸ்லாமியர் என்பதற்காகவே கைது செய்கிறது. இதில் இருந்து இர்பான் அஹமது எப்படி தப்பிக்கிறார், உண்மையான தீவிரவாதி அபுபக்கர் யார் என்பதை நோக்கி பயணிக்கும் கதையே விஷ்ணு விஷாலின் ’எஃப்ஐஆர்’.
’ராட்சசன்’ படத்துக்கு இணையான வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், அதற்காக கொடுத்த உழைப்பை இர்பான் அஹமது கேரக்டர் வழியாக காண முடிகிறது. கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு படிப்புக்கு ஏற்ற வேலைதேடும் இளைஞராக, ஒவ்வொரு முறையும் ’மதவாதியா’ என கேட்கும் இடங்களிலும், தான் தீவிரவாதி இல்லை என நிரூபிக்கப் போராடும் இடங்களிலும் நடிப்பில் மிளிர்கிறார். இதேபோல், படத்தில் மற்றொரு முக்கியமான கேரக்டர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வரும் கெளதம் வாசுதேவ் மேனன். அவர் தனது வழக்கமான மேனரிஸத்தால் கவர்கிறார்.
படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா என மூன்று கதாநாயகிகள். இதில் ரைசா வில்சனே படம் முழுக்க வருகிறார். ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர். விஷ்ணு விஷாலின் அம்மாவாக மலையாள நடிகை மாலா பார்வதி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இனி அம்மா கேரக்டர்களுக்கும் மலையாளத்தில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்யலாம் என்று தோணவைக்கும் அளவுக்கு பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்துள்ளார்.
இந்தியாவில் மேலோட்டமான பார்வையுடன் இஸ்லாமியர்கள் அந்நியமாக ஒதுக்கப்படுவதும், அவர்களை தீவிரவாதிகள் என்று பொதுபுத்தியில் முத்திரைக் குத்தப்படுவதையும் உடைக்க முற்பட்டிருக்கும் இயக்குநர் மனு ஆனந்த் அதில் வெற்றிகண்டாரா என்றால், முழுமையாக இல்லை. இர்பானின் ரகசிய பின்னணியை பார்வையாளர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க முயன்று திரைக்கதையின் லாஜிக்கில் கோட்டைவிட்டுள்ளார். கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் என்ஐஏவை சில இடங்களில் மிகைப்படுத்தியும், சில இடங்களில் குறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் விடப்பட்ட ஓட்டைகளை அடைக்க, இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் என்கிற பெயரில் காண்பித்தாலும், அதையும் சரியாக செய்யவில்லை. இறுதியில் அவர் கொடுக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரு நாட்டின் பிரதமரிடம் என்ஐஏவின் ஆப்ரேஷன் மறைக்கப்படுவது தொடங்கி பல குளறுபடிகள். இதுமட்டுமில்லாமல், தமிழகத்தைச் சேர்ந்தவராக காண்பிக்கப்படும் என்ஐஏ அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன், தமிழக அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, இந்தி பேசும் பிரதமரிடம் தமிழ் பேசுவது போன்ற காட்சியமைப்புகள் என சிறிய விஷயங்களில் கூட இயக்குநர் கவனம் செலுத்தவில்லை.
எனினும், ஹேக்கிங் காமெடி, பரபரப்பான காட்சியமைப்பு, இஸ்லாமியர்களின் மனவலியை போக்கவைக்கும் வசனங்கள் போன்றவற்றால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.
இசையமைப்பாளர் அஸ்வத்தின் பின்னணி இசை படத்துக்கு வலுசேர்க்கிறது. அதேபோல் ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அருள் வின்சென்ட் சென்னையின் நகர் பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
களைய வேண்டிய பிரச்சனையை கையாண்டிருக்கும் இயக்குநர், அதற்காக திரைக்கதையில் இன்னும் கூடுதல் உழைப்பை கொடுத்திருந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் தவறான பார்வையை மாற்ற நினைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாம். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் இது முக்கியப் படமாகவும் அமைந்திருக்கும்.
குறைகள் இருந்தாலும், பரபரப்பான பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு போன்றவற்றால், சுவாரஸ்யமான சினிமாவாக எஃப்ஐஆர் நிச்சயம் எளிய ரசிகனை கவரும்.