

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்தப் படம் முதலில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணத்தால், இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மற்றும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக விளம்பரப்படுத்தும் பணிகளை இப்போது தான் படக்குழு தொடங்கியுள்ளது.
‘எதற்கும் துணிந்தவன்’ வெளியானவுடன் சுமார் 10 நாட்களுக்காவது தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தும். அதற்குப் பிறகு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் ‘பீஸ்ட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளுக்குக் குறைந்தளவு நாட்களே இருக்கும். இதனால் ‘பீஸ்ட்’ வெளியீட்டை ஏப்ரல் 28-ம் தேதி மாற்றி அமைக்கலாமா என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.
‘பீஸ்ட்’ வெளியீட்டை மாற்றினால், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரு வேளை ‘பீஸ்ட்’ திட்டமிட்டபடி வெளியானால் ஏப்ரல் 28-ம் தேதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியாகவுள்ளது. இந்த தேதிகள் குழப்பத்தால் மட்டுமே ஏப்ரல் வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு.