கட் ஆவதில் காமெடி முன்னிலை: நடிகர் விவேக் வேதனை

கட் ஆவதில் காமெடி முன்னிலை: நடிகர் விவேக் வேதனை
Updated on
2 min read

காமெடி காட்சிக்கு யாரும் எழுந்து போவதில்லை. ஆனால், முதலில் காமெடியன்கள் காட்சிகளைத் தான் தூக்குவார்கள் என்று நடிகர் விவேக் வேதனையுடன் குறிப்பிட்டார்.

'சாரல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரம், நடிகர் விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் விவேக் பேசும்போது, "பொதுவா மிமிக்ரி செய்றவங்க சினிமால ஹீரோவா நடிக்க வந்துட்டா, மிமிக்ரி செய்யறதை நிறுத்திவிட வேண்டும். இல்லைன்ன, அவங்க உண்மையாக நடித்தாலே வேற ஒரு நாயகன் நடித்த மாதிரியே தான் ரசிகர்களுக்கு தெரியும்.

இப்பக்கூட நான் கார்த்திக்கு அப்பாவா நடித்திருக்கிறேன். இதில் கொடுமை என்னவென்றால் 25 வருடத்திற்கு முன்பு கார்த்தியோட அப்பாவான சிவக்குமாருக்கு நான் மகனாக நடித்திருக்கிறேன். இப்போது அவருடைய மகன் கார்த்திக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன்.

வாத்தியார் ராமன் என்று ஒரு நடிகர் இருக்கார். கவிதாலயா மட்டுமல்ல பல படங்களில் பல நடிகர்களுக்கு வசனப் பயிற்சி கொடுத்தவர். டைட்டிலில் கார்டில் அவருக்கு ‘வசனப் பயிற்சி - வாத்தியார் ராமன்’ என்று போடுவார்கள். 1986-ல் அவரோட மகனுக்குக் கல்யாணம். அந்தக் கல்யாண வரவேற்பில் மிமிக்ரி செய்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோகர், நம்பியார், கமல், ரஜினின்னு எல்லா நடிகர்களை போலவும் நடித்துக் காட்டினேன்.

எனக்கு முன்பு, முதல் வரிசையில் இயக்குநர் பாலசந்தர் உட்கார்ந்திருந்தார். என் நிகழ்ச்சி முழுவதும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அழைத்தார் என்று போனேன். என் கையைப் பிடித்து "எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுப்பியா?" என்று கேட்டார். "என்ன சார்?" எனக் கேட்டேன். "இனிமேல் யார் மாதிரியும் நடித்து மிமிக்ரி செய்ய மாட்டேன் என்று சத்தியம் பண்ணிக் கொடு" என்றார். அவ்வளவோ மோசமாக நடித்துவிட்டோம் என நினைத்துக் கொண்டேன்.

பிறகு "நீ ஒரு நடிகனாக மாறினால் அதில் வேறு யாரோட சாயலும் இருக்கக் கூடாது. அதுக்காகத் தான் சொல்கிறேன். இனிமேல் மிமிக்ரி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்" என்றார். அதற்குப் பிறகு தெரிந்தது, அவர் என்னை அவருடைய படத்தில் நடிக்க வைக்க போகிறார் என்று. 1987ல் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலமாக தான் அறிமுகமானேன்.

25 வருடத்திற்கு முன்பு இருந்த தமிழ்த் திரையுலகம் வேறு, இப்போது வேறு. இன்றைக்கு மொத்தமே 3 நாள் தான் திரையரங்கில் படம் ஒடுகிறது. இப்போது எல்லாம் 2 மணி நேரம்தான் ரசிகன் படத்தில் உட்கார்ந்திருக்கான். 2 மணி நேரத்துக்கு மேல் போய்விட்டால் ‘கட் பண்ணு..’ ‘கட் பண்ணு’ என்று சொல்கிறார்கள். அவர்கள் முதல்ல கை வைக்குறது காமெடியன்கள் காட்சி மீது தான்.

நாயகன் வானத்தைப் பார்த்துட்டே நின்றுக் கொண்டிருப்பார். அதெல்லாம் விட்டுவிடுவார்கள். நாயகி அழுது முடித்து கண்ணைத் துடைத்துக் கொண்டிருப்பார். அதையும் விட்டுவிடுவார்கள். முதலில் காமெடியன்கள் காட்சியைத் தான் தூக்குவார்கள். காமெடி காட்சிக்கு யாரும் எழுந்து போவதில்லை. தமிழ்ச் சினிமாவில் 50, 60 வருட வரலாற்றில் காமெடி காட்சிகள் மற்றும் வெறித்தனமான சண்டைக் காட்சிகளில் ரசிகர்கள் யாரும் எழுந்து வெளியே போகமாட்டார்கள். இது மாற்ற முடியாத விதி" என்றார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in