

‘மாநாடு’ வெற்றிக்குப் பிறகு பல முன்னணி ஹீரோக்கள் புதிய வகை கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் வெற்றிமாறன் படைப்புகள் போல படமெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் படக்குழுவை பாராட்டி வந்தனர். இப்படத்துக்குப் பிறகு தற்போது அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மத லீலை’ என்ற படத்தில் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில், ”‘மாநாடு’ வெற்றி என் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பூஸ்டர். ‘சென்னை 28- 2’ வெற்றிப்படம் தான் என்றாலும் அதன் பிறகான இடைவெளி மிகப்பெரியது. நமது படம் பார்வையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தால் அதை விட சிறந்த விஷயம் வேறு எதுவும் இல்லை. நல்ல விமர்சனம் என்பது இன்னொரு போனஸ். விநியோகஸ்தர்கள் அனைவரும் இப்படத்தால் தங்களுக்கு லாபம் என்று என்னிடம் சொல்லும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ‘சென்னை 28’, ‘மாநாடு’, ‘மங்காத்தா’ போன்ற படங்கள் ஒரு இயக்குநரின் வாழ்வில் அமைவது அரிது.
‘மாநாடு’ படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களான ஷங்கர், அட்லீ, கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் என பலரும் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தினர். ‘மாநாடு’ வெற்றிக்குப் பிறகு பல முன்னணி ஹீரோக்கள் புதிய வகை கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கேள்விப்படுகிறேன். ‘மாநாடு’ தோல்வி அடைந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
விரைவில் வரவிருக்கும் ‘மன்மத லீலை’ படம் இதுவரை நான் செய்யாத ஒரு புது முயற்சியாக இருக்கும். ஒருநாள் வெற்றிமாறன் எடுப்பதைப் போல ஆழமான படங்களைப் படைக்க விரும்புகிறேன். ஆனால், அதுவும் என் பாணியில் இருக்கும்” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.